தமிழகத்தில் எஸ்ஐ-க்கள் முதல் டிஎஸ்பி-க்கள் வரையிலான காவல்துறையினர் கைத்துப்பாக்கியை உடன் வைத்திருக்க வேண்டும் என சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டுள்ளார். காவலர்களின் கைகளில் இனி லத்தியும் அவசியம் இருக்க வேண்டும் எனவும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சில நாட்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து காவல் துறை அதிகாரிகள் அடுத்தடுத்து இடமாற்றம் செய்யப்பட்டனர். சென்னை மாநகர காவல் ஆணையராக கூடுதல் டிஜிபி அருண் நியிமிக்கப்பட்டார். தமிழக சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி-யாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்படார்.
இந்நிலையில் டேவிட்சன் தேவாசீர்வாதம் காவல் துறையினருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “காவல் நிலையங்களில் எஸ்ஐ-க்கள் முதல் டிஎஸ்பி-க்கள் வரையிலான அதிகாரிகள் இனி கட்டாயம் கைத்துப்பாக்கி வைத்திருக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.
அதன்படி, வேலூர் சரகத்தில் உள்ள எஸ்ஐ-க்கள், இன்ஸ்பெக்டர்கள், டிஎஸ்பி-க்களுக்கு கைத்துப்பாக்கி கையாளும் பயிற்சியுடன் துப்பாக்கி சுடுதல் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், வேலூர் சரகத்தில் உள்ள காவல் அதிகாரிகள் நாளை முதல் கைத்துப்பாக்கி வைத்திருப்பதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், திருவண்ணாமலையில் வேலூர் சரக காவல்துறை அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டம் நேற்று மாலை 6 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை நீடித்தது. சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி-யான டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எஸ்பி-க்கள் மணிவண்ணன் (வேலூர்), டாக்டர் கார்த்திகேயன் (திருவண்ணாமலை), ஆல்பர்ட் ஜான் (திருப்பத்தூர்), கிரண் ஸ்ருதி (ராணிப்பேட்டை) மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், உட்கோட்ட டிஎஸ்பி-க்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டம் தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, “காவலர்கள் ஏன் லத்தியை மறந்தார்கள். அதிகாரிகள் ஏன் துப்பாக்கி வைத்துக் கொள்ளவதில்லை. இனி, லத்தியும், கைத்துப்பாக்கியும் உடன் வைத்திருக்க வேண்டும். லத்தி, துப்பாக்கிகளை எந்த நேரத்தில் எப்படி கையாள வேண்டும் என பயிற்சி அளிக்க வேண்டும். எஸ்ஐ-க்கள் தாங்கள் பணியாற்றும் எல்லையில் மக்கள் மத்தியில் பெயரெடுக்கும் அளவுக்கு பணியாற்ற வேண்டும்.
தமிழ்நாட்டில் 800 டிஎஸ்பி-க்கள் பணியாற்றுகின்றனர். இதில், 250 பேர் உட்கோட்டங்களில் பணியாற்றுகின்றனர். அவர்கள் பணியை முறையாக செய்யாவிட்டால் சுழற்சி முறையில் பணியிடமாற்றம் செய்யப்படுவார்கள். இனி, காவல் நிலைய பொறுப்பு அலுவலர்கள் (எஸ்.எச்.ஓ), இன்ஸ்பெக்டர்கள், டிஎஸ்பி-க்களின் பணித்திறனுக்கு ஏற்ப மதிப்பெண் வழங்கப்பட்டு பணியிட மாறுதல் வழங்கப்படும்.
கொலை வழக்குகளில் உண்மையான குற்றவாளிகளை மட்டுமே கைது செய்ய வேண்டும். அரசியல் ரீதியான புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுங்கள். ஏன் கைது நடவடிக்கை என கேள்வி வந்தால் அதற்கான பதிலைக் கூறுங்கள். அரசியல் அழுத்தங்களுக்கு பணிய வேண்டாம். காவல் துறையினர் அடிப்படை பணியை செய்ய வேண்டும். புகார் மனுக்கள் மீது எஸ்ஐ-க்கள், இன்ஸ்பெக்டர்கள், டிஎஸ்பி-க்கள் முறையாக விசாரிக்க வேண்டும் என சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி-யான டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்தார்” என்றனர்.