ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது அம்மாநில போலீஸார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆந்திராவில் சமீபத்தில் நடந்த ஆட்சி மாற்றத்தில் தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து கூட பெறவில்லை. எனினும், தெலுங்கு தேசம் – ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே மோதல் போக்கும் மட்டும் முடிவு இல்லாமல் இருந்து வருகிறது. தற்போது ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது அம்மாநில போலீஸார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏவான ரகுராம கிருஷ்ண ராஜு கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜெகன்மோகன் ரெட்டி மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஜெகன்மோகன் மட்டுமில்லாமல், தலா இரண்டு மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் ஓய்வுபெற்ற காவல் துறையினர் மீதும் இதே கொலை முயற்சி வழக்குப் பதியப்பட்டுள்ளது. குண்டூர் நகரம்பாலம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ ரகுராம கிருஷ்ண ராஜு ஒரு மாதத்துக்கு முன்பே ஜெகன்மோகன் ரெட்டி மீது வழக்குப் பதிய காவல் நிலையத்துக்கு கடிதம் மூலம் புகார் கொடுத்த நிலையில், தற்போது ஒரு மாதத்துக்கு பின் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
ஜெகன் ஆட்சியில் தன்னை காவல் நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்தி, கொலை செய்ய முயற்சித்ததாக கூறி எம்எல்ஏ ரகுராம கிருஷ்ண ராஜு புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் ஜெகனுக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்பப்படும் என்று ஆந்திர காவல் துறை தகவல் கூறியுள்ளது.