போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபா் சாதிக்குக்கு ஜாமீன் வழங்கி டெல்லி போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ரூ.2,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சுமாா் 3,500 கிலோ சூடோபீட்ரின் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கில் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிா்வாகியுமான ஜாபா் சாதிக்கை, மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினா் மாா்ச் 9-ஆம் தேதி கைது செய்தனா். டெல்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபா் சாதிக் மீது, சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த நிலையில், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் டெல்லி போதைப்பொருள் சிறப்பு நீதிமன்றம் ரூ.1 லட்சம் உத்தரவாத தொகையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதன்படி வழக்கின் விசாரணை முடிவடையும் வரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் திங்கள்கிழமை கையெழுத்திட வேண்டும். செயல்பாட்டில் இருக்கும் செல்போன் எண் மற்றும் பாஸ்போர்டை விசாரணை அதிகாரியிடம் வழங்க வேண்டும். முகவரி மாறினால் அதுகுறித்து தகவல்களை தெரிவிக்க வேண்டும்.
ஜாமீன் கிடைத்தாலும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கிலும் ஜாபர் சாதிக் கைதியாகி உள்ளதால் சிறையில் இருந்து வெளியே வரமுடியாது.
இதனிடையே, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட என்னை முறைப்படி 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தாததால், கைது செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். போதைப் பொருள் கடத்தல் வழக்குக்கும் எனக்கும் எந்தத் தொடா்பும் இல்லை. என் மீது தவறான உள் நோக்கத்துடன் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சட்டவிரோதமான கைதை சட்டப்பூா்வமாக மாற்றும் வகையில், எனக்கு எதிராக சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வாரண்ட் பெற்றுள்ளது’ என சென்னை உயா்நீதிமன்றத்தில் ஜாபா் சாதிக் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தா் மோகன் அமா்வு வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனர். இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்டால் தான் ஜாஃபர் சாதிக் வெளியே வர முடியும்.