பென்சில்வேனியாவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் விவரங்களை அந்நாட்டு புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பட்லர் நகரில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரான முன்னாள் அதிபர் ட்ரம்ப், தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அந்த சப்தம் கேட்டு அங்கு குழுமியிருந்த மக்கள் கீழே குனிந்தனர். மேடையில் பேசிக் கொண்டு இருந்த ட்ரம்பும் குனிந்தார். இதில ட்ரம்பின் வலது காது பகுதியில் காயம் ஏற்பட்டது. காதில் இருந்து ரத்தம் சொட்டிய நிலையில் தனது கையை உயர்த்தி காட்டினார். தொடர்ந்து பாதுகாவலர்கள் அவரை மேடையில் இருந்து பத்திரமாக அழைத்து சென்றனர். இதில் கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மீது போலீஸார் நடத்திய பதில் தாக்குதலில் அவர் உயிரிழந்தார். இதற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எஃப்பிஐ தகவலின்படி, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 20 வயதான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ட்ரம்ப் உரையாற்றிய மேடையில் இருந்து சற்று தொலைவில் உள்ள ஒரு உற்பத்தி ஆலையின் உயரமான இடத்தில் இருந்து க்ரூக்ஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. எனினும், போலீஸார் நடத்திய பதில் தாக்குதலில் க்ரூக்ஸ் உடனடியாக சுட்டு வீழ்த்தப்பட்டார். க்ரூக்ஸ் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 70 கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள பகுதியில் வசித்து வந்துள்ளார் என்று எஃப்பிஐ தெரிவித்தது. என்றாலும், இவர் ஏன் டிரம்ப்-ஐ சுட முயன்றார் என்பது பற்றிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய எஃப்பிஐ அதிகாரிகள், “துப்பாக்கிச் சூட்டை ஒரு படுகொலை முயற்சியாக கருதுகிறோம்” என்று தெரிவித்தனர். “அதேநேரம், ஒரு நபர் தான் துப்பாக்கியால் சுட்டதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இப்போதைக்கு ஒருவரை சுட்டு வீழ்த்தியுள்ளோம். தடயங்களை சேகரித்து வருகிறோம். அதனடிப்படையில் விசாரணைகள் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டுக்குப் பிறகு ட்ரூத் சமூக ஊடகத்தில் கருத்து பதிவிட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், “முன் எப்போதையும்விட இந்த தருணத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அமெரிக்கர்கள் வலிமையானவர்கள், உறுதியானவர்கள் என்ற நமது உண்மையான குணத்தை நாம் காட்ட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.