மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவராக கவுரவ் கோகய் மற்றும் தலைமைக் கொறடாவாக கொடிக் குன்னில் சுரேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான கடிதம் மக்கள வைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவர், தலைமை கொறடா மற்றும் மக்களவை காங்கிரஸ் கட்சியின் 2 கொறடாக்கள் நியமனம் தொடர்பாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் கட்சித்தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார் என அக்கட்சியின் பொதுச் செயலர் கே.சி.வேணு கோபால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-
நாடாளுமன்ற மக்களவை கங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக கவுரவ் கோகய் செயல்படுவார். கேரளாவில் இருந்து 8 முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட கொடிக்குன்னில் சுரேஷ் கட்சியின் தலைமை கொறடாவாக இருப்பார். விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் மற்றும் கிஷன் கஞ்ச் எம்.பி. முகமது ஜாவேத் ஆகியோர் மக்களவையில் கட்சியின் கொறடாக்களாக இருப்பர். இவ்வாறு அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இந்த புதிய நியமன அறிவிப்பு வெளியாகி உள்ளது. ராகுல் காந்தியின் வழிகாட்டுதலின் பேரில் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி கட்சிகள் மக்களின் கோரிக்கைகளுக்காக மக்களவையில் வீரியத்துடன் குரல் கொடுக்கும் என்று கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.