மாணவச் செல்வங்களின் பசி போக்கிய மனநிறைவு அடைந்தேன் என முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்திய நிகழ்வு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்நிலையில், இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்யப்பட்டவுடன் தமிழ்நாடு முழுக்க எத்தனை குழந்தைகளுக்கு உணவளிக்கப்பட்டது என்பதை #CMDashBoard வழியாகக் கண்காணித்து, மாணவச் செல்வங்களின் பசி போக்கிய மனநிறைவு அடைந்தேன்!” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கல்வி வளர்ச்சி நாளான இன்று (ஜூலை 15) தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் இத் திட்டத்தை தமிழ்நாடு அரசின் சார்பில் முதல்வர் தொடங்கிவைத்தார். இத்திட்டத்தின் மூலம் உள்ள 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 குழந்தைகள் பயனடைவார்கள். தொடர்ந்து குழந்தைகளுடன் அமர்ந்து அவர் உணவு உண்டார். அப்போது, அருகில் அமர்ந்திருந்த சிறுமிகளுக்கு காலை உணவை ஊட்டிவிட்டு அவர்களுடன் பேசினார்.
இந்த நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:-
என்னைப் பொறுத்தவரை நம்முடைய தமிழ்நாட்டு மாணவர்கள் படிப்பதற்கு எதுவும் தடையாக இருக்கக்கூடாது என்று நினைக்கிறேன். அது பசியாக இருந்தாலும் சரி, நீட் தேர்வாக இருந்தாலும் சரி, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையாக இருந்தாலும் சரி, எந்த தடை வந்தாலும் அந்த தடைகளை உடைப்பதுதான் எங்களுடைய முதல் பணி! நீட் தேர்வை நாம் எதிர்க்க தொடங்கியபோது ஏன் எதிர்க்கிறீர்கள் என்று சிலர் எதிர் கேள்வி கேட்டார்கள். ஆனால், இன்றைக்கு நீட் தேர்வில் நடக்கின்ற முறைகேடுகளை பார்த்து, உச்சநீதிமன்றம் கேள்வி கேட்கின்றது. மாணவர் சமுதாயம் போர்க்கொடி தூக்குகின்றது. பல மாநில முதலமைச்சர்கள், தேசிய தலைவர்கள் நீட் வேண்டாம் என்று குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஏன்? ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழ்நாட்டு வழியில், நீட் தேர்வை எதிர்க்கின்றது!
மத்திய பா.ஜ.க அரசு அரசியலுக்காக இப்போது, நெருக்கடி நிலையை பற்றி நாடாளுமன்றத்தில் தொடர்ந்து பேசுகிறார்கள். ஆனால், நாம் அவர்களிடம் கேட்கின்ற கேள்வி நெருக்கடி நிலை காலத்தில், ஒத்திசைவுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வியை உடனடியாக மாநிலப் பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசு தயாராக இருக்கிறதா? இந்த ஆக்கபூர்வமான செயலை அவர்கள் செய்வார்களா? நம்மை பொறுத்தவரை, நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை தேவையற்றது. அதை எதிர்க்கிறோம். ஒருபக்கம் அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்களை நடத்துகிறோம். இன்னொரு பக்கம் மாணவர்களின் நலனுக்காக பள்ளிக்கல்விக்கும், கல்லூரிகளுக்கும், உயர்கல்விக்கும் ஏராளமான திட்டங்களை தீட்டுகிறோம். எனவே, “தடைகளை நாங்கள் உடைக்கிறோம். மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்துங்கள். ஏனென்றால், நான் திரும்பவும் சொல்கிறேன், கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து, அந்த சொத்தை தமிழ்நாட்டு மாணவர்கள் பெற்றாகவேண்டும். மாணவச் செல்வங்களே! “படிங்க.. படிங்க.. படிங்க.. நீங்கள் உயர படிங்க.. நீங்கள் உயர.. உங்கள் வீடும் உயரும்! இந்த நாடும் உயரும்!” என்று உங்களையெல்லாம் மனதார வாழ்த்தி விடைபெறுகிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.