சென்னை போலீஸ் கமிஷனர் அருண் நடவடிக்கையால் கிரிமினல்கள் அலறல்!

ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் அருண் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் கடந்த 5 ஆம் தேதி, கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து இந்த கொலை வழக்கில், பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், அருள் உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 11 பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்துள்ள காவல்துறையினர், பரங்கிமலையில் உள்ள இணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து, தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்டு வந்த ரவடி திருவேங்கடத்தை ஞாயிறு அதிகாலை 5 மணியளவில் விசாரணைக்காக சென்னை மாதவரம் ஏரிக்கரை அருகே அழைத்துச் சென்றுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை மாவதரம் பகுதியில் பதுக்கி வைத்திருப்பதாக திருவேங்கடம் கூறியதன் பேரில் அவரை அங்கு போலீசார் அழைத்து சென்றுள்ளனர். ரெட்டேரி ஏரிக்கரை ஆட்டு மந்தை செல்லும் வழியில் இயற்கை உபாதையை கழிப்பதற்காக வாகனத்தை நிறுத்தியுள்ளனர். உடனே காவலர்களை தள்ளிவிட்டு திருவேங்கடம் தப்பியோடியுள்ளார். இதையடுத்து போலீசார் உள்ளூர் காவல்துறையினரையும் உதவிக்கு அழைத்து தீவிரமாகத் தேடி உள்ளனர்.

அப்பகுதியில் புழல் வெஜிடேரியன் வில்லேஜில் ஒரு தகரக் கொட்டாயில் மறைந்திருந்த திருவேங்கடத்தை பிடிக்க முயன்ற போது, அவர் அங்கு பதுக்கி வைத்திருத்த துப்பாக்கியால் காவலர்களை நோக்கிச் சுட்டதாகவும் இதனால் போலீசார், திருவேங்கடத்தை தற்காப்பிற்காக சுட்டதாகவும் காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ரவுடி திருவேங்கடம் என்கவுன்டரை தொடர்ந்து சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையர் நரேந்திர நாயர், கொளத்தூர் துணை ஆணையர் பாண்டியராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். ரவுடி திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் இருந்து துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டுகள், அரிவாள் போன்ற ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேரில் ரவுடி திருவேங்கடம், நேற்று அதிகாலை போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் தற்போது 10 பேர் போலீசார் கட்டுப்பாட்டில் உள்ளனர். இந்நிலையில் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை முழுவதும் ரவுடிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஜாமினில் இருக்கும் ரவுடிகள் நிபந்தனைகளை மீறினால் ஜாமினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அருண், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது, குற்றங்களை தடுப்பது, நடந்த குற்றங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்வது ஆகியவற்றிற்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று கூறி இருந்தார். மேலும், ரவுடிகளுக்கு அவர்களின் மொழியில் பதில் அளிக்கப்படும் என்றும் அதிரடியாக கூறி இருந்தார். தொடர்ந்து சென்னை முழுவதும், குற்றப் பின்னணி கொண்ட 6 ஆயிரம் ரவுடிகளின் இருப்பிடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க வேண்டும் என்று காவல் ஆய்வாளர்களுக்கு அதிரடி உத்தரவும் பிறப்பித்தார். கடந்த மூன்று நாட்களாகவே சென்னையில் காவல்துறை உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர்கள் தலைமையில் காவல்துறையினர் மூன்று நாட்களாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், குற்றப் பிண்ணனி உடைய ரவுடிகளின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் குடும்ப உருப்பினர்களிடம் எச்சரித்து வருகின்றனர்.