சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஜாபர் சாதிக்கை 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் டில்லி மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு காவல்துறையால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், தி.மு.க முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக், சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத் துறையும் தனியாக வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் அவர் ஜூன் 26-ம் தேதி கைது செய்யப்பட்டார். டெல்லி திகார் சிறையில் இருந்து, சிறை மாற்ற வாரண்ட் மூலம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜாபர் சாதிக்-கை நீதிமன்ற காவலில் வைக்கவும், 14 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரியும் அமலாக்க துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, அமலாக்கத் துறையினர் துன்புறுத்தினார்களா என ஜாபர் சாதிக்கிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த ஜாபர் சாதிக், ஏற்கனவே 3 நாள் காவலில் எடுத்து விசாரித்த அமலாக்க துறை, சமூகத்தில் முக்கிய நபர்களாக இருக்கும் 4 பேரின் பெயர்களை இந்த வழக்கில் சேர்க்கும் வகையில், அவர்களின் பெயரை குறிப்பிடும்படி அமலாக்கத் துறை துன்புறுத்துவதாக நீதிபதியிடம் தெரிவித்தார். இதையடுத்து ஜூலை 29ம் தேதி வரை, ஜாபர் சாதிக்கை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதி, 15 நாட்கள் அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க கோரிய மனு மீதான விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தார். அந்த விசாரணைக்கு ஜாபர் சாதிக்-கை ஆஜர்படுத்த உத்தரவிட்ட நீதிபதி, அதுவரை அவரை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.