மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினை ஒரு சைபர் தாக்குதல் அல்ல என்று கிரவுட்ஸ்ட்ரைக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து கிரவுட்ஸ்ட்ரைக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
விண்டோஸ் ஹோஸ்ட்களுக்கான ஒற்றை உள்ளடக்க அப்டேட்டில் ஏற்பட்ட இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுடன் கிரவுட்ஸ்ட்ரைக் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. மேக் மற்றும் லினக்ஸ் ஹோஸ்ட்களில் எந்த பாதிப்பும் இல்லை. இது ஒரு சைபர் தாக்குதல் அல்ல. பிரச்சினை கண்டறியப்பட்டு, அதனை சரிசெய்வதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. சமீபத்திய அப்டேட்களுக்கு எங்களுடைய சப்போர்ட் போர்ட்டலை வாடிக்கையாளர்கள் பின்தொடருமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்.
அதிகாரபூர்வ சேனல்கள் மூலம் கிரவுட்ஸ்ட்ரைக் பிரதிநிதிகளை தொடர்பு கொள்வதை நிறுவனங்கள் உறுதி செய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த எங்கள் குழு முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நிலைமையின் தீவிரத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். மேலும் சிரமத்திற்கும் இடையூறுக்கும் ஆழ்ந்த வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். கணினிகள் மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு அவர்களுக்கான சேவையை வழங்குவதை உறுதி செய்யும் பொருட்டு நாங்கள் பாதிக்கப்பட்ட அனைத்து வாடிக்கையாளர்களுடனும் தொடர்பில் இருக்கிறோம்.
கிரவுட்ஸ்ட்ரைக் சாதாரண முறையிலேயே இயங்குகிறது என்றும் இந்தச் சிக்கல் எங்களது ஃபால்கன் இயங்குதள அமைப்புகளைப் பாதிக்காது என்றும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் உறுதியளிக்கிறோம். மேலும் உங்களுடைய கணினிகள் சாதாரண முறையில் இயங்கினாலோ, அவற்றில் ஃபால்கன் சென்சார் நிறுவப்பட்டிருந்தாலோ அவற்றின் பாதுகாப்பில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இவ்வாறு கிரவுட்ஸ்ட்ரைக் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ‘கிரவுட்ஸ்டிரைக்’ என்ற நிறுவனம், பல்வேறு முன்னணி மென்பொருள் நிறுவனங்களுக்கு சைபர் பாதுகாப்பு சேவையை வழங்கி வருகிறது. மைக்ரோசாப்ட், கூகுள் உட்பட 23,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதன் வாடிக்கையாளராக உள்ளன.
‘கிரவுட்ஸ்டிரைக்’ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் சைபர் பாதுகாப்பை உறுதி செய்ய அவ்வப்போது தனது ‘பால்கன் சென்சார்’ மென்பொருளை மேம்படுத்துவது வழக்கம். அந்த வகையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சைபர் பாதுகாப்பை உறுதிசெய்ய ‘கிரவுட்ஸ்டிரைக்கின்’ ‘பால்கன் சென்சார்’ மென்பொருள் அப்டேட் செய்யப்பட்டது. இதில் எதிர்பாராத விதமாக தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, மைக்ரோசாப்டின் சர்வர் நேற்று திடீரென முடங்கியது. இதனால், உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் அஸூர், ஆபீஸ் 365 சேவைகளை பயன்படுத்தும் நிறுவனங்களின் செயல்பாடுகள் முற்றிலுமாக முடங்கின. பல்லாயிரக்கணக்கான நிறுவனங்கள், தனிநபர்கள் பயன்படுத்தும் மைக்ரோசாப்ட் மென்பொருளில் இயங்கும் கணினி, மடிக்கணினிகளில் நீல திரை தோன்றி, ‘கணினி செயலிழந்துள்ளது’ என்பதை காட்டியது.