திமுக இளைஞரணியின் 45-வது ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி தொடங்கப்பட்டு, 44 ஆண்டுகள் நிறைவடைந்து, 45-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. திமுக இளைஞரணியின் 45வது ஆண்டு தொடக்க விழா, சென்னை தேனாம்பேட்டையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. 1980ல் ஸ்டாலினால் தொடங்கப்பட்ட ‘கோபாலபுரம் இளைஞர் தி.மு.க’ 1980-இல் மதுரை ஜான்சி ராணி பூங்காவில் இளைஞர் அணி என்னும் அதிகாரப்பூர்வ அணியாக மாறியது. 1982-இல் அப்போதைய திமுக தலைவர் கருணாநிதியால் மாநில இளைஞர் அணிச் செயலாளராக நியமிக்கப்பட்டார் மு.க.ஸ்டாலின். அப்போது முதல் 30 ஆண்டுகளாக இளைஞரணியின் மாநில செயலாளராக இருந்து பணியாற்றினார் இன்றைய முதல்வர் ஸ்டாலின்.
திமுக செயல்தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, மாநில இளைஞர் அணிச் செயலாளராக வெள்ளக்கோவில் சாமிநாதன் பணியாற்றினார். 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, ஜூலை 4 அன்று மாநில இளைஞர் அணிச் செயலாளராகப் பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின். உதயநிதி ஸ்டாலின் இளைஞரணிக்கு தலைமைப் பொறுப்பேற்று 5 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இளைஞர் அணியில் 30 லட்சம் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்து, அதனைச் சாதித்துக் காட்டினார் உதயநிதி ஸ்டாலின். இந்நிலையில், திமுக இளைஞரணி 45வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி இன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றினார் உதயநிதி ஸ்டாலின்.
இந்நிலையில், திமுக இளைஞரணி 45வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி, வாழ்த்து தெரிவித்துளார் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின். முதல்வர் ஸ்டாலின், தனது மனதுக்கு நெருக்கமான அணி, தாய் வீடு என்று எப்போதும் குறிப்பிடும் இளைஞரணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் வீடியோவை பகிர்ந்து பதிவிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாவது:-
45-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது திமுக இளைஞரணி. இளைஞரணிப் படையைச் சிறப்பாக வழிநடத்திச் செல்லும் தம்பி உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டுகள்! வாழ்த்துகள்! கழகக் கொள்கைகளையும் வரலாற்றையும் இன்றைய இளைஞர்களுக்கு ஏற்றாற்போல் எடுத்துச் சென்று, அவர்களை அரசியல் விழிப்புணர்வும் கொள்கைத் தெளிவும் பெற்றவர்களாக வார்த்தெடுப்பீர்கள் எனக் கழகத் தலைவராக நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.