ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கவுன்சிலர் ஹரிதரன் அதிமுகவில் இருந்து நீக்கம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி கவுன்சிலர் ஹரிதரன், அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி கவுன்சிலர் ஹரிதரன், அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்சிக்கு களங்கம் மற்றும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வழக்கறிஞர் அருளின் செல்போனை வைத்திருந்ததாக ஹரிதரன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலராக உள்ளார். போலீசார் விசாரணையில் இவர், கொடுத்துள்ள வாக்கு மூலத்தின் அடிப்படையில் கூவம் ஆற்றில் வீசப்பட்ட ஐந்து செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது. இவை கொலையாளிகள் பயன்படுத்தியவை என தெரிய வந்துள்ளது.

தமிழகத்தையே உலுக்கி உள்ள இந்த படுகொலை வழக்கில் அடுத்து அடுத்து வரும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன. அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும் இந்த கொலையில் தொடர்புள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட கவுன்சிலர் ஹரிதரனை, அதிமுகவில் இருந்து நீக்கி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப் பெயரும் ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த, கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு 3-வது வார்டு உறுப்பினர் ஹரிதரன், இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். எனவே, அதிமுக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.