வேலையின்மை 17.8%லிருந்து 10% ஆக குறைந்துள்ளது: நிர்மலா சீதாராமன்!

நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். இதில், வேலையின்மை 17.8%லிருந்து 10% ஆக குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பாஜக மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சிப்பொறுப்பு ஏற்றிருக்கிறது. இந்நிலையில், என்டிஏ அரசின் மூன்றாவது ஆண்டுக்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த அறிக்கையை தாக்கல் செய்கிறார். இந்நிலையில் இதற்கு முன்னதாக இன்று பொருளாதார ஆய்வறிக்கையை நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அதில் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் குறைந்திருப்பதாக கூறியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

நாடு முழுவதும் வேலைவாய்ப்பில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை மேலும் அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கோவிட் 19 பெருந்தொற்றுக்கு பிறகு வேலையின்மை விகிதம் குறைந்துள்ளது. குறிப்பாக கடந்த 2017-2018 காலக்கட்டத்தில் 17.8 சதவிகிதமாக இருந்த வேலையின்மை 2022-2023ல் 10% ஆக குறைந்திருக்கிறது. இதன் மூலம் இளைஞர்களின் உழைப்பு பங்கேற்பு அதிகரித்திருப்பது தெரிய வந்திருக்கிறது. வாராந்திர நிலையின் அளவுகோலில் கூட கிராமப்புற மற்றும் நகர்ப்புற வேலைவாய்ப்புகள் அதிகரித்திருப்பது தெரிய வந்திருக்கிறது. காலாண்டு அறிக்கையை எடுத்துக்கொண்டால், 2024 மார்ச் மாத நிலவரப்படி 15 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கான நகர்ப்புற வேலையின்மை விகிதம் 6.7% ஆகக் குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 6.8% ஆக இருந்தது.

2022-2023ல் இந்தியாவில் தொழிலாளர்களின் எண்ணிக்கை 56.5 கோடியாக இருந்திருக்கிறது. வேலைவாய்ப்பை பொறுத்த வரையில் விவசாயத்தில் 45%, உற்பத்தியில் 11.4%, சேவைகளில் 28.9% மற்றும் கட்டுமானத்தில் 13% பேர் வேலை செய்கின்றனர். குறிப்பாக பெண்களுக்கு விவசாயத் துறையில் வேலைவாய்ப்பு அதிகமாக இருக்கிறது. 57.3% பணியாளர்கள் சுயதொழில் செய்பவர்களாகவும், 18.3% பேர் ஊதியம் பெறாத குடும்பப் பணியாளர்களாகவும் பணிபுரிகின்றனர். சாதாரண தொழிலாளர்கள் 21.8% ஆகவும், வழக்கமான ஊதியம்/சம்பளம் பெறும் தொழிலாளர்கள் 20.9% பணியாளர்களாகவும் உள்ளனர். குறிப்பாக, கிராமப்புறங்களில் பெண்களின் சுயவேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது” என நிதியமைச்சரின் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மறுபுறம் நாடு முழுவதும் குறைந்த பிணியிடங்களுக்கு அதிக அளவில் இளைஞர்கள் போட்டியிடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்னர் குஜராத் மாநிலம் பாரூச்சில் உள்ள லார்ட்ஸ் பிளாசா ஹோட்டலில் வேலைக்காக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவிந்திருந்தனர். இந்த ஹோட்டலில் வெறும் 10 காலியிடங்களுக்காக நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது. வேலைக்கு வர விருப்பம் உள்ளவர்கள் நேரில் வரவேண்டும் என்றும் ஹோட்டல் நிர்வாகம் விளம்பரம் செய்திருந்தது. இந்த விளம்பரத்தை பார்த்த சுமார் 1800 இளைஞர்கள் ஹோட்டல் முன்பு குவிந்திருக்கின்றனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்ற நிலையில், ஹோட்டலின் முன்பு இருந்த தடுப்பு கம்பி உடைந்து விழுந்திருக்கிறது. இதனால் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், பெரும் அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை

அதேபோல மும்பையில் ஏர் இந்தியா நிறுவனத்தில் பயணிகளின் உடமைகளை ஏற்றி இறக்கும் சுமை தூக்கும் பணிக்கு ஆட்கள் எடுப்பதாக அறிவிக்கப்பட்டது. மொத்த காலிப்பணியிடங்கள் 2,216. பணிக்கான ஒப்பந்தம் 3 ஆண்டுகள். சம்பளம் ரூ.20,000லிருந்து ரூ.25,000 வரை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. சேர விருப்பம் இருப்பவர்கள் ஜூலை 16ம் தேதி காலை மும்பை அலுவலகத்திற்கு நேர்காணலுக்கு வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பையடுத்து வெறும் 2,216 காலிப்பணியிடங்களுக்கு சுமார் 25,000க்கும் அதிகமான இளைஞர்கள் மும்பை அலுவலகத்திற்கு முன் குவிந்திருக்கின்றனர். இதில் பெரும்பாலானோர் பட்டதாரி இளைஞர்கள். இப்படியாக வேலையின்மை பிரச்னைகள் அதிகரித்துள்ள நிலையில், நிதியமைச்சர் வேலையின்மை குறைந்திருப்பதாக கூறியிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.