திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தொட்ட தொழிலாளர்களின் வாழ்வுரிமையை பறித்துவிட்டு சூழல் சுற்றுலாவை வளர்ப்பது ஏன் என்று தமிழக அரசுக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
தாமிரபரணியில் உயிர்நீத்த மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி கூறியதாவது:-
நீதிமன்றத்தில் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் தொடர்பான வழக்கு இன்னும் முடிவு பெறவில்லை. அரசின் பார்வையில் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் குறித்த கோளாறு இருக்கிறது. இந்த விவகாரத்தில் இன்னமும் சரியான புரிதல் தமிழக அரசுக்கு இல்லை.
ஆயிரக்கணக்கான தொழிளாலர்களை வெளியேற்றிவிட்டு அங்கு புலியை வளர்ப்பது ஏன். எலியை வளர்ப்பது ஏன்? மாநில அரசின் செயல்பாடு மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை பொறுத்தவரை நேர்மையாக இல்லை. தமிழக அரசின் அறிக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதில் சமூக நீதி இல்லை. வேலை செய்து வரும் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வேலையை பறித்து விட்டு அவர்களுக்கு 100 நாள் வேலை வாய்ப்பை கொடுப்பதா.
மாஞ்சோலைக்கு சுற்றுலா வருபவர்கள் அந்த சுற்றுலாவை தவிர்க்க வேண்டும். வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 99 ஆண்டு குத்தகைக்கு தனியார் தேயிலைத் தோட்ட நிர்வாகமான பிபிடிசிக்கு கொடுத்த குத்தகையை ஏற்கனவே நிறுத்தி வைத்திருக்கலாமே. எனவே மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் விவகாரத்தில் அரசு நிதானமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். ஏனோ தானோ என்று முடிவு எடுக்கக் கூடாது. இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.