கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திடீரென கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திடீரென கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு நேரில் சென்றார். மருத்துவ மனையில் செயல்பட்டு வரும் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உடல்நிலை குறித்து விசாரித்ததோடு, அந்த நோயாளிகளின் உறவினர்களுடன் உரையாடினார். மேலும், நரம்பியல் சிகிச்சை பிரிவிற்கும் சென்று நோயாளிகளை சந்தித்து, அவர்களுக்கு வழங்கப்படும் இயன்முறை சிகிச்சைகளை பார்வையிட்டார்.

பிறகு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் இதய கேத்லாப் ஆய்வகத்திற்கு சென்று ஆய்வு செய்து, நோயாளிகளிடம் சிகிச்சை விவரம் குறித்தும் மருத்துவ வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். உணவு கூடத்திற்கு முதல்வர் சென்று அங்கு நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை சுவைத்து பார்த்து ஆய்வு செய்தார். பின்னர், பணியாளர்களின் வருகை பதிவேடு, மருந்துகள் இருப்பு பதிவேடு போன்றவற்றை ஆய்வு செய்து, அதன் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் வந்து செல்லும் இந்த மருத்துவமனைக்கு, கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பராமரிப்பு பணியாளர்களை நியமிக்குமாறும், டயாலிசிஸ் சிகிச்சை பிரிவிற்கு கூடுதல் டயாலிசிஸ் இயந்திரங்களை வழங்குமாறும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதுமட்டுமல்லாது, மருத்துவமனை முதல்வர் மற்றும் மருத்துவர்களிடம் மருத்துவமனையை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்றும், நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சைகளை காலதாமதமின்றி வழங்கிட வேண்டும் என்றும், அத்தியாவசிய மருந்துகள் தேவையான அளவிற்கு இருப்பு வைத்திருப்பதை உறுதி செய்திட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை முதல்வர் பார்த்தசாரதி, சிறப்பு அலுவலர் ரமேஷ், மருத்துவர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.