நிதி ஆயோக் கூட்டத்தை காங்கிரஸ் முதல்வர்கள் புறக்கணிப்பார்கள்: கே.சி.வேணுகோபால்!

பாரபட்சமான, கூட்டாட்சி தத்துவத்துக்கு விரோதமான மத்திய பட்ஜெட்டை கண்டித்து, காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பார்கள் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 23-ம் தேதி தாக்கல் செய்தார். இதில், ஆந்திராவுக்கு ரூ.15 ஆயிரம் கோடி, பிகாருக்கு ரூ.26 ஆயிரம் கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவில் ஆட்சியில் உள்ளது. அதேபோல, பிகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சியில் உள்ளது. எனவே, இது கூட்டணி கட்சிகளுக்கான பட்ஜெட் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் இண்டியா கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இண்டியா கூட்டணி கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்கள், மத்திய பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் கடுமையாக விமர்சித்தனர்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியதாவது:-

மத்திய பட்ஜெட் நியாயமாக, நேர்மையாக இருந்திருக்க வேண்டும். ஆனால், இது பாரபட்சமாக, அபாயகரமானதாக உள்ளது. கூட்டாட்சி தத்துவம் மற்றும் அரசியலமைப்பு சட்ட கொள்கைகளுக்கு விரோதமாக அமைந்துள்ளது. இதை கண்டிக்கும் விதமாக, டெல்லியில் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தை, காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் புறக்கணிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

மாநிலங்களவை காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி கூறும் போது, ‘‘காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் மட்டுமன்றி, இண்டியா கூட்டணி கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்களும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க வாய்ப்பு உள்ளது’’ என்றார். ஏற்கெனவே, பட்ஜெட்டை கண்டித்து நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.