சென்னை வந்துள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் வர்த்தகத்துறை அமைச்சர் அப்துல்லா பின் தவுக் அல்மரி தலைமையிலான குழுவினர், தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தமிழகத்தில் தொழில் முதலீடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
2022 மார்ச் மாதம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துபாய் மற்றும் அபுதாபி நாடுகளுக்குச் சென்றார். அப்போது அங்கு தொழில்துறை அமைச்சர் சுல்தான் பின் அகமதுவைச் சந்தித்து பேசினார். மேலும், பல்வேறு முதலீட்டாளர்களை சந்தித்து தொழில் தொடங்க தமிழகம் வரும்படி அழைப்பு விடுத்தார். இதையடுத்து, துபாயில் ரூ.2,600 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பின் அபுதாபி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கும் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஐக்கிய அரபு அமீரகத்திலும் முதலீட்டாளர்களை சந்தித்தார்.
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் வர்த்தகத்துறை அமைச்சர் அப்துல்லா பின் தவுக் அல்மரி தலைமையிலான குழுவினர் 4 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளனர். அமைச்சர் அல்மரி நேற்று முன்தினம், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரணியனுடன் நடைபயிற்சி மேற்கொண்டார். தொடர்ந்து, நேற்று காலை தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, அமைச்சர் அல்மரி தலைமையிலான குழுவினர் சந்தித்து பேசினர். இதில் புத்தொழில்கள், தொழில் சூழலை மேம்படுத்துதல், விவசாயம், உணவு பதப்படுத்துதல், ஜவுளி மற்றும் ஆடைகள், நகை மற்றும் விலையுயர்ந்த கற்கள், மின்வாகனங்கள், மின்னணுவியல், மோட்டார் வாகனம் மற்றும் வாகன உதிரி பாகங்கள், பொறியியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில் இணைந்து பணியாற்ற முதலீடுகள் மேற்கொள்வதன் மூலம் தமிழகத்துக்கும், ஐக்கிய அரபு நாடுகளுக்கும் இடையே உள்ள பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
சந்திப்பின் போது அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, முதல்வரின் செயலர் நா.முருகானந்தம், பொதுத்துறை செயலர் ரீட்டா ஹரிஷ் தாக்கர், தொழில்துறை செயலர் வி.அருண்ராய், தொழில் வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் விஷ்ணு மற்றும் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் குழுவினர், பன்னாட்டு தொழில் குழுமத்தின் தலைவர்கள் உள்ளிட்டோர் இருந்தனர்.