தேசிய நுழைவுத் தேர்வை ரத்து செய்து மருத்துவ சேர்க்கைக்கான “பழைய முறையை” மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் பாஜக தலைமையிலான மத்திய அரசையும் கடுமையாகச் சாடி வருகின்றனர். இது தீவிர பிரச்னையாக மாறி நாடாளுமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:-
நீட் தேர்வின் விளைவு எதுவாக இருந்தாலும் லட்சக்கணக்கான மாணவர்கள் வலியும் மன வேதனையும் அடைவார்கள் என்பது மட்டும் நிச்சயம். இதுபோன்ற முக்கியமான தேர்வை முறையாக நடத்த முடியும் என்று மக்களுக்கு உறுதியளிக்க மத்திய அரசு தவறிவிட்டது, இது பிரச்னையை மேலும் தீவிரமாக்கியிருக்கிறது.
பல மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று, ஏன் மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வை மீண்டும் பழைய முறையை நடைமுறைப்படுத்தக்கூடாது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய கல்வி அமைச்சகம் நடத்தும் மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் போன்ற படிப்புகளுக்கான சேர்க்கையின் நுழைவுத்தேர்வில் பெரிய அளவிலான முறைகேடுகள் நடைபெற்றதாகவும், வினாத்தாள் கசிவு, ஆள்மாறட்டம் உள்ளிட்ட தொடர் சர்ச்சை நிலவி வருகின்றது. மேலும் நீட் இளநிலை மறுதேர்வு குறித்த மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததும் குறிப்பிடத்தக்கது.