அக்னி பாதை திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி பொய்களைப் பரப்புகிறார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-
கார்கில் விஜய் திவஸ் தினத்தை முன்னிட்டு தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவது போன்ற நிகழ்வுகளிலும் பிரதமர் நரேந்திர மோடி அற்ப அரசியல் செய்வது மிகவும் வருந்தத்தக்கது. இதற்கு முன் எந்த பிரதமரும் இப்படி செய்ததில்லை. ராணுவத்தின் உத்தரவின் பேரில் தனது அரசு அக்னி பாதை திட்டத்தை செயல்படுத்தியதாக மோடி கூறுகிறார். இது அப்பட்டமான பொய். நமது வீரம் மிக்க ஆயுதப்படைகளுக்கு மன்னிக்க முடியாத அவமானம். மோடி, நீங்கள்தான் பொய்களைப் பரப்புகிறீர்கள்.
முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவனே, ‘அக்னி பாதை திட்டத்தில்’ பணியமர்த்தப்பட்டவர்களில் 75% பேர் நிரந்தரப் பணிக்காக எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்றும், 25% பேர் 4 ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்படுவார்கள் என்றும் பதிவு செய்துள்ளார். ஆனால், மோடி அரசு இதற்கு நேர்மாறாக செயல்பட்டு, முப்படைகளுக்கும் இந்த திட்டத்தை வலுக்கட்டாயமாக அமல்படுத்தியது. ‘அக்னி பாதை’ திட்டம் ராணுவத்துக்கும், கடற்படை மற்றும் விமானப் படைக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று எம்.எம்.நரவனே தனது புத்தகத்தில் பதிவு செய்ததாகவும், ஆனால், மோடி அரசு அந்தப் புத்தகம் வெளியிடப்படுவதைத் தடுத்து நிறுத்தியது என்றும் செய்திகள் கூறுகின்றன.
6 மாத பயிற்சியின் மூலம் தொழில்முறை வீரர்களை உருவாக்குகிறோமா? ராணுவத்தில் சேர்வது தேசபக்திக்காகவே தவிர, சம்பாதிப்பதற்காக அல்ல. ஓய்வு பெற்ற அதிகாரிகள் பலரும் அக்னி பாதை திட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர். இது தேசிய பாதுகாப்பு மற்றும் கிராமப்புற இளைஞர்களின் விருப்பங்களுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும், இந்தத் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்றும் கோரியுள்ளனர். இவை அனைத்தும் பதிவில் உள்ளது.
அக்னி வீரர்களுக்கு ஓய்வூதியம், பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம், தாராளமயமாக்கப்பட்ட குடும்ப ஓய்வூதியம், குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை என எதுவும் இல்லை. இதுவரை 15 அக்னி வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். குறைந்தபட்சம் அவர்களின் தியாகத்தையாவது பிரதமர் மதிக்க வேண்டும். அக்னி பாதை திட்டத்தின் மீது இளைஞர்கள் மத்தியில் கடும் கோபமும் கடும் எதிர்ப்பும் உள்ளது. காங்கிரஸ் கட்சியின் கோரிக்கை நிலையானது. அக்னி பாதை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, கார்கில் போர் வெற்றியின் 25-வது நினைவு தினத்தில் பேசிய பிரதமர் மோடி, “அக்னி பாதை திட்டத்தின் குறிக்கோள், இந்திய ராணுவத்தை இளமையாக வைத்திருப்பதுதான். ராணுவத்தை தொடர்ந்து போருக்குத் தகுதியாக வைத்திருப்பதே அக்னி பாதை திட்டத்தின் நோக்கம். துரதிர்ஷ்டவசமாக, சிலர் தேசிய பாதுகாப்பு தொடர்பான இத்தகைய உணர்ச்சிகரமான பிரச்சினையை அரசியலில் கலக்கின்றனர். சிலர் தங்களின் சொந்த அரசியல் நலனுக்காக ராணுவத்தின் சீர்திருத்தத்திலும் அரசியல் செய்கின்றனர். பல ஆயிரம் கோடி மோசடி செய்து நமது ராணுவத்தை பலவீனப்படுத்தியது இவர்கள்தான். விமானப் படைக்கு நவீன போர் விமானங்கள் கிடைக்கக் கூடாது என்று விரும்பியதும் இதே நபர்கள்தான். ராணுவம் என்றால் அரசியல்வாதிகளுக்கு வணக்கம் செலுத்துவது, அணிவகுப்பு நடத்துவது என்று சிலர் நினைக்கிறார்கள், ஆனால், எங்களைப் பொறுத்தவரை ராணுவம் என்றால் 140 கோடி நாட்டு மக்களின் நம்பிக்கை” என்று பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.