பட்ஜெட்டை கண்டித்து இடதுசாரிக் கட்சிகள் ஆக.1-ல் மறியல் போராட்டம்: சு.வெங்கடேசன்

இடதுசாரிக் கட்சிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்-எல்) ஆகியவை ஆகஸ்ட் 1-ல் மறியல் போராட்டத்தை நடத்துகிறோம் என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் கூறினார்.

மதுரையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மகபூப்பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் மதுரை எம்பி சு.வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய மக்களுக்கு, கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக மத்திய பாஜக அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. இதனை கண்டித்து இடதுசாரிக்கட்சிகள் சார்பில் மாபெரும் போராட்டம் ஆக.1-ம் தேதி அன்று நடைபெறும். நாடாளுமன்றத் தேர்தலுக்குப்பின் முதன்முறையாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது.

இந்த பட்ஜெட் நாடு முழுவதும் எதிர்ப்பை, கோபத்தை உருவாக்கியுள்ளது. இது நாட்டுக்கான பட்ஜெட்டாக இல்லாமல், நாற்காலிக்கான பட்ஜெட்டாக பாஜக அரசு தாக்கல் செய்துள்ளது. ஆந்திரா, பிகாருக்கான குறிப்பிட்ட சிறப்புத் திட்டங்களை அறிவித்த இந்த பட்ஜெட், நாட்டின் வேறு எந்த மாநிலத்திற்கும் சிறப்பு திட்டங்களை அறிவிக்கவில்லை. தமிழ்நாட்டிற்கு எந்த திட்டங்களும் அறிவிக்கவில்லை.

வஞ்சிக்கப்பட்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இந்தியாவில் 10 பெருநகரங்களை கொண்ட தமிழகத்திற்கு கடந்த 10 ஆண்டுகளில் மற்ற மாநிலங்களுக்கு ஒதுக்கிய நிதியை காட்டிலும் தமிழகத்திற்கு ஒதுக்கிய நிதி மிகமிகக் குறைவு. அதே நிலை இந்த பட்ஜெட்டிலும் தொடர்கிறது. இது தமிழகத்தின் வளர்ச்சியில் மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும். மதுரை மெட்ரோ திட்டம், கோவை மெட்ரோ திட்டத்திற்கு எதுவும் இல்லை. பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அரசுக்கு வரி வருமானத்தில் முதலிடத்தில் இருந்தது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விதிக்கும் வரி. அதற்கு அடுத்த இடத்தில் மறைமுக வரி, இதற்கு அடுத்து தனிநபர் வருமான வரி இருந்தது. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

கார்ப்பரேட்கள் செலுத்தும் வரி 3-வது இடத்திற்கு சென்றுவிட்டது. ஜிஎஸ்டி வரி முதலிடம், தனிநபர் வரி இரண்டாமிடத்தில் உள்ளது. எனவே ஒட்டுமொத்தமாக இந்த பட்ஜெட் நாட்டுக்கான பட்ஜெட்டாக இல்லாமல், பாஜக அரசின் நாற்காலிக்கான பட்ஜெட்டாக உள்ளது. மாநிலங்களை பழிவாங்குகிற சந்தர்ப்பவாத பட்ஜெட்டாக இருக்கிறது.இந்தியாவின் தொழில், விவசாயம், சிறுகுறு, நடுத்தர தொழில்களை நசுக்குகிற அநீதி இழைக்கிற பட்ஜெட்டாக இருக்கிறது. நாளையுடன் (திங்கள்கிழமை) பட்ஜெட் மீதான விவாதம் முடிவடைகிறது. நாளை மறுநாள் விவாதத்தின் மீது நிதியமைச்சர் பதிலளிக்கிறார்.இதில் மிகப்பெரிய துரதிர்ஷ்டம் என்னவென்றால், 2014-ம் ஆண்டு வரை ரயில்வே பட்ஜெட் இருந்தது. தமிழ்நாட்டுக்கும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கும் மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

அநீதியைக் கண்டித்துத்தான் இடதுசாரிக் கட்சிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்-எல்) ஆகியவை ஆகஸ்ட் 1-ல் மறியல் போராட்டத்தை நடத்துகிறோம். மதுரை ரயில் நிலையம், ஒத்தக்கடை, திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.