பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்காமல் மத்திய அரசு வஞ்சித்துள்ளது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மற்றும் அம்மா பேரவை சார்பில் கள்ளிக்குடி ஒன்றியம் சிவரக்கோட்டையில் பொதுமக்களுக்கு திமுக ஆட்சியில் நடைபெற்ற போதை பொருள் கடத்தல், கள்ளச்சாரய பலி சம்பவங்கள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சரும், எதிர்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சிக்கு வந்து 3 மாதத்தில் கப்பலூர் டோல்கேட் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்றார். ஆட்சிக்கு வந்து 3 ஆண்டாகியும் இதுவரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது பொதுமக்களிடம் மனு வாங்க கூட முதல்வர் மறுக்கி்றார். அதிமுக ஆட்சியில் உள்ளூர் மக்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டது. கப்பலூர் டோல்கேட் விவகாரத்தில் பொதுமக்கள் முன்னெடுக்கும் அனைத்து போராட்டங்களுக்கும் அதிமுக ஆதரவு அளிக்கும். அதிமுக முன்னின்று போராட்டத்தை நடத்தும்.
தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்துள்ளது. பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. 39 எம்பிக்கள் இருந்தும் தமிழகத்தின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. 39 எம்பிக்களும் நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க செய்திருக்க வேண்டும். மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதியும் தரவில்லை, நிவாரணமும் தரவி்ல்லை. பீகாருக்கும், ஆந்திராவுக்கும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக மக்கள் என்ன பாவம் செய்தார்கள். திமுக கூட்டணிக்கு வாக்களித்த காரணத்தினால் இந்த புறக்கணிப்பா? தற்போது எடப்பாடி பழனிச்சாமி மட்டும் ஆட்சியில் இருந்திருந்தால் அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தை முடக்கியிருப்பார்கள். காவிரி உரிமைப் பிரச்சனையில் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு கூட்டணியில் இருந்தாலும் அதிமுக எம்பிக்கள் 37 பேர் நாடாளுமன்றத்தை 22 நாள் முடக்கினர். இவ்வாறு அவர் பேசினார்.