கப்பலூர் சுங்கச்சாவடி விவகாரம் தொடர்பாக அமைச்சர் மூர்த்தி தலைமையில் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் நாளை திருமங்கலத்தில் திட்டமிட்டபடி முழு அடைப்பு நடத்தப்படும் என போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
மதுரை திருமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான கப்பலூர் சுங்கச்சாவடி அமைத்துள்ளது. இது விதிமுறைகள் மீறி அமைக்கப்பட்டுள்ளதாக திருமங்கலம் சுற்றுவட்டார கிராம மக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். அதனால், அவர்கள் இந்த சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்று கடந்த பல ஆண்டாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், திருமங்கலம் பகுதி சுற்றுவட்டார கிராம மக்களுக்கு மட்டும் கப்பலூர் சுங்கச்சாவடியில் இலவசமாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அண்மையில் திடீரென்று, கப்பலூர் சுங்கச்சாவடியை ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனம், திருமங்கலம் பகுதி மக்களுக்கும் இலவச அனுமதியை ரத்து செய்தது. இதனால் அதிருப்தியடைந்த திருமங்கலம் சுற்றுவட்டார கிராம மக்கள், பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் அமைச்சர் பி.மூர்த்தி, ஆட்சியர் சங்கீதா மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் 4 கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போதும் சுமுக தீர்வு காணப்படாததால் சுங்கச்சாவடி எதிர்ப்புக் குழுவினர் நாளை திருமங்கலத்தில் முழு அடைப்பு நடத்தப்போவதாக அறிவித்தனர்.
இந்நிலையில், சுங்கச்சாவடி எதிர்ப்பு குழு நிர்வாகிகளையும், கிராம மக்களையும் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார். அதன்படி, ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் சங்கீதா தலைமையில், அமைச்சர் பி.மூர்த்தி முன்னிலையில் வருவாய்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர், சுங்கச்சாவடி எதிர்ப்புக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பேசிய அமைச்சர் பி.மூர்த்தி, “கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றுவது நம்முடைய எதிர்கால திட்டமாக இருந்தாலும், தற்காலிகமாக திருமங்கலம் பகுதி மக்களுக்கு சுங்கச்சாவடியில் வானகங்களுக்கு கட்டணம் பெறக்கூடாது என்பதும், இந்த வாகனங்களை தனி டிராக்கில் அனுமதிக்க வேண்டும் என்பதும் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்தக் கோரிக்கையை நம்முடைய பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் அரசு தலைமை செயலாளர், தேசிய நெடுஞ்சாலைத்துறை இயக்குநரிடம் தெரிவித்தோம்.
அதன்படி, கடந்த 2020ம் ஆண்டு வரை என்ன நடைமுறை பின்பற்றதோ அதையே பின்பற்ற வேண்டும், கூடுதலாக எந்த விதிமுறைகளையும் புகுத்தக்கூடாது, திருமங்கலம் பகுதி வாகனங்களை சுங்கக் கட்டணம் இல்லாமல் அனுமதிக்க வேண்டும்” என்றார்.
பொதுமக்கள் தரப்பில் பேசியவர்கள், “இப்படிதான் சொல்வார்கள், கடைசியில், புதுப் புது விதிமுறைகளை கொண்டு வந்துவிடுவார்கள். அதனால், கப்பலூர் சுங்கச்சாவடியை நிரந்தரமாக அகற்ற வேண்டும்” என்றனர். இதற்கு பதிலளித்த ஆட்சியர் சங்கீதா, “கண்டிப்பாக கட்டணம் வசூல் செய்யமாட்டார்கள். விரைவில் அதற்கான உத்தரவுகள் வரும். சுங்கச்சாவடியை அகற்றுவது தொடர்பாக நாம் முடிவெடுக்க முடியாது. மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும்” என்றார்.
இதை ஏற்க மறுத்த பொதுமக்கள், “அப்படியென்றால், அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்” என்றனர். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் மூர்த்தி, “புரியாமல் பேசாதீர்கள். கோரிக்கையை நிறைவேற்றிய பிறகு இப்படி சொல்வது நியாயமாக இருக்காது” என்றார்.
அதற்கு பொதுமக்கள் தரப்பில், “2020-ம் ஆண்டு நடைமுறை என்று சொல்கிறீர்கள். அதில் என்ன இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியாது. மேலும், இது திருமங்கலம் பகுதிக்கான பிரச்சினை மட்டுமில்லை, திருமங்கலம் சட்டமன்ற தொகுதி மக்களுடைய பிரச்சினை. திருமங்கலம் சட்டமன்ற தொகுதி முழுவதும் வசிக்கும் மக்களுக்கு சுங்கக் கட்டணம் இல்லாமல் வாகனங்களை அனுமதிக்க வேண்டும்” என்றனர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் மூர்த்தி, “திருமங்கலம் என்பதற்கான ஆதார் கார்டைக் காட்டினால் போதும். சுங்கச்சாவடியில் கட்டணமின்றி அனுமதிப்பார்கள். ஆதார் கார்டும், திருமங்கலம் என்பதற்கான ஆர்டிஓ வாகனப்பதிவும் இல்லாவிட்டால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது” என்றார்.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது அமைச்சர் மற்றும் ஆட்சியர் தரப்புக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் கூச்சல், குழப்பத்துடனேயே கூட்டம் நிறைவடைந்தது. ஒரு தரப்பினர், அமைச்சர் பி.மூர்த்தி கூறிய வாக்குறுதிகளை ஏற்றுக் கொண்டாலும், பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொள்ளாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக அறிவித்துச் சென்றனர்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பி.மூர்த்தி, “கப்பலூர் சுங்கச்சாவடிக்கு சுமுகமாக நிரந்தர தீர்வு காண்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. வணிகர்கள், சுங்கச்சாவடியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும், 60 கி.மீ., தொலைவில் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். சுங்கச்சாவடி 2012-ம் ஆண்டு கப்பலூரில் அமைக்கப்பட்டது. அன்று முதல் 2020-ம் ஆண்டு வரை திருமங்கலம் பகுதி மக்கள் சுங்கக் கட்டணமில்லாமல் அனுமதிக்கப்பட்டனர். கடந்த 3 ஆண்டுகளாக சிலசமயம் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதற்கு நிரந்தர தீர்வாக 2020-ம் ஆண்டு வரை என்ன நடைமுறை கடைபிடிக்கப்பட்டதோ அது பின்பற்றப்படும் என முடிவெடுக்கப்பட்டது. அதனால், திருமங்கலம் பகுதி மக்களுக்கு இனி எந்த விதமான தொந்தரவும் ஏற்படாது. இவர்கள் வாகனங்களை டோல்கேட்டில், 1 மற்றும் 10-வது டிராக்கில் கட்டணமில்லாமல் அனுமதிக்கப்படும்” என்றார்.
சுங்கச்சாவடி எதிர்ப்புப் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ஹமீது கூறுகையில், “கடந்த 19-ம் தேதி தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை எட்டப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் இன்று எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாகவும் சொல்லி அழைத்தனர். இப்போது, 2020-ம் ஆண்டு பின்பற்ற நடைமுறை என்று சொல்கிறார்கள். அதை விவரமாகச் சொல்லி, உத்தரவோ அல்லது கடிதமோ தர மறுக்கிறார்கள். அதனால், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. திட்டமிட்டப்படி நாளை முழு அடைப்பு போராட்டம் நடக்கும்” என்றார்.