தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடி வரும் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை: வீரலட்சுமி!

அண்ணன் ஆம்ஸ்ட்ராங் போல தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடி வரும் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தமிழர் முன்னேற்றப் படை அமைப்பின் தலைவர் வீரலட்சுமி குற்றஞ்சாட்டியிருக்கிறார்..

தமிழர் முன்னேற்றப் படை என்ற அமைப்பை நடத்தி வருபவர் வீரலட்சுமி. ஏராளமான சமூக பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தும், போராட்டங்களை நடத்தியும் வருகிறார்.. தேர்தலிலும் போட்டியிட்டு தொடர் தோல்வியை சந்தித்து வருபவர். ஒவ்வொருமுறையும் செய்தியாளர்களை சந்திக்கும்போதெல்லாம் வீரலட்சுமி பகீர் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருவார். அந்தவகையில், இன்றும் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதால், பாதுகாப்பு கோரி, சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்திருப்பதாக வீரலட்சுமி கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அண்ணனுடன் எனக்கு நல்ல நட்புறவு இருந்தது. தமிழ்நாட்டில் நீங்கள் ஒரு புரட்சி பெண்ணாக வருவீர்கள் என்று எனக்கு ஊக்கம் தந்தார். தமிழகத்திலுள்ள பட்டியலின மக்களுக்காகவும், பெண்களுக்காகவும் தொடர்ந்து நீங்கள் போராடி வருவதற்கு எனக்கு வாழ்த்தையும் சொன்னார். இன்றைக்கு அண்ணனை வெட்டி கொன்றுவிட்டார்கள்.. அவரின் படுகொலை என்பது தமிழ்நாட்டு மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட இளைஞர்களுக்கும், ஈடுகட்ட முடியாத இழப்பு.. அவரது குழந்தைக்காகவும், மனைவிக்காகவும்தான் நாங்கள் இப்போது மிகவும் வேதனைப்படுகிறோம்.

தமிழ்நாட்டு காவல்துறையானது, மிகவும் வலிமையானது.. ஆசியா கண்டத்திலேயே விசாரணையில் மிகவும் பெயர் போனது.. அதனால், ஆம்ஸ்ட்ராங் அண்ணன் கொலை தொடர்பான விசாரணை நடந்து முடியும் வரை, அனைவரும் அமைதி காக்க வேண்டும். முக்கியமாக சில யூடியூப் சேனல்கள், தேவையற்ற கருத்துக்களை வெளியிடுகின்றன. காரணம், சிலர் இந்த படுகொலையை நியாயப்படுத்துகிறார்கள், சிலர் கண்டனம் சொல்கிறார்கள்.. இப்படி மாறி மாறி சொல்லி குழப்பத்தை ஏற்படுத்துவதை நிறுத்த வேண்டும். போலீசார் இதுகுறித்து விசாரணையை முழுமையாக நடத்தி முடிக்கும்வரை, யூடியூப் சேனல்கள், மற்றும் சில தலைவர்களும் அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஒருவேளை போலீசார் விசாரணையில், ஆம்ஸ்ட்ராங் அண்ணனின் படுகொலையில் நமக்கு நீதி கிடைக்காவிட்டால், அதனை மக்கள் மத்தியில் கொண்டுபோய் வைப்போம். அப்போது, மக்களே இதற்கான பதிலை தரட்டும்.

இப்போது நான் போலீசில் புகார் ஒன்றை தந்துள்ளேன்.. பட்டியலின சமூக மக்களுக்கு உதவியாகவும், அவர்களின் பாதுகாப்புக்கு அரணாக இருக்கக்கூடிய தலைவர்களையும், என்னுடைய அமைப்பில் தாழ்த்தப்பட்டோர் அணியின் தலைவர்களுக்கும், எனக்கும் கொலை மிரட்டல் போனில் வந்து கொண்டிருக்கிறது. ஒருத்தர் என் போனில் பேசுகிறார், “நீங்கெல்லாம் அதிகாரத்துக்கு வந்துவிட்டால், நாங்கள் என்ன செய்றது? நீங்கள் எல்லாம் அதிகாரத்துக்கு வந்தீர்களானால், கொட்டி கொட்டி குனிய வைக்கணும். அதையும் மீறி எழுந்துவந்தால், உங்களையெல்லாம் போட்டு தள்ளணும்.. ஆம்ஸ்ட்ராங்கை எப்படி நரம்பை அறுத்து கொலை செய்து ரோட்டில் வீசியெறிந்துவிட்டு போனோமோ, அதுபோலவே உன்னையும் கொலை செய்து விடுவேன்” என்று 2 நாட்களுக்கு முன்பு எனக்கு மிரட்டல் விடுத்தார்.. இதை எங்கள் கட்சி பொறுப்பாளர்கள் ரிக்கார்ட் செய்திருக்கிறார்கள். (செய்தியாளர்களிடம் அந்த ஆடியோ பதிவை போட்டு காட்டுகிறார் வீரலட்சுமி)..

தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டோருக்காக போராடும் என்னை போன்ற அரசியல் கட்சி தலைவர்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருக்கிறது. இதுக்கு முன்னாடியும் இப்படித்தான் எனக்கு பலமுறை கொலை மிரட்டல் வந்தது.. அது தொடர்பாகவும், முன்பிருந்த கமிஷனரிடம் புகார் தந்திருந்தேன்.. ஆனால், எல்லாத்தையும் குப்பை தொட்டியில் போட்டுட்டாங்களாம்.. ஒரு புகாருக்குகூட நடவடிக்கை இல்லை.. இப்படி மிரட்டல் விடுபவர்களை கைது செய்தால்தான், மீண்டும் கொலை மிரட்டல்கள் வராது.. “A பிளஸ்” ரவுடிகள் சிறையிலிருந்திருந்தால், இப்படி படுகொலை நடந்திருக்காது.. அவங்க எல்லாம் இப்போ வெளியேதான் நடமாட்டிட்டு இருக்காங்க.. அதனால், இதுபோன்ற ரவுடிகளை கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும். அப்போதுதான் பெண்கள் உட்பட தமிழக மக்கள் பாதுகாப்பாக வாழ முடியும்.. எனவே, ஆம்ஸ்ட்ராங் அண்ணன் கொலை வழக்கை போலீசார் நடத்தி முடிக்கும்வரை, சில தலைவர்களும் அமைதி காக்க வேண்டும். இவ்வாறு வீரலட்சுமி கூறினார்.