பிகாரில் 65% இடஒதுக்கீட்டை ரத்து செய்து பிறப்பித்த உயர் நீதி மன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
பிகாரில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு பிறகு இடஒதுக்கீட்டை50-லிருந்து 65%ஆக உயர்த்தவகை செய்யும் மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதுதவிர, பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை மத்திய அரசு ஏற்கெனவே நிறைவேற்றியது. இதன்மூலம் ஒட்டுமொத்த இடஒதுக்கீடு75% ஆக அதிகரித்தது.
இது தொடர்பான வழக்கில் 65% இடஒதுக்கீட்டை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதை எதிர்த்து பிகார் அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறை யீடு செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன்பு நேற்று பரிசீலனைக்கு வந்தது. அப்போது பிகார் மாநில அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷ்யாம் திவான், “சத்தீஸ்கர் மாநிலத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இதே மாதிரியான ஒரு வழக்கில், உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை வழங்கி உள்ளது. இதுபோல, பாட்னா உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கும் இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என்றார்.
நீதிபதிகள் கூறும்போது, “பிகார் அரசின் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம். வரும் செப்டம்பர் மாதம் விசாரணை நடைபெறும். ஆனால், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது” என்றனர்.