மத்திய பட்ஜெட்டில் மாநிலங்களை புறக்கணிக்கவில்லை: நிர்மலா சீதாராமன்!

மத்திய பட்ஜெட்டில் மாநிலங்களை புறக்கணிக்கவில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்தார். பட்ஜெட்டில் மாநிலங்களின் பெயர் இடம்பெறவில்லை என்றாலே அவை புறக்கணிக்கப்பட்டதாக இல்லை எனவும் குறிப்பிட்டார்.

மக்களவையில் இது குறித்து பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

2004 முதல் மக்களவையில் பட்ஜெட் உரைகளைக் கேட்டு வருகிறேன். 2004 – 2005-ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பட்ஜெட்டில், 17 மாநிலங்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. அந்த 17 மாநிலங்களுக்கும் நிதி செல்லவில்லையா? அதை நிறுத்தி வைத்தீர்களா? ஐக்கிய முற்போக்கு கூட்டணி உறுப்பினர்களிடம் கேட்கிறேன். அவர்கள் அதனை நிறுத்தியிருந்தால் பலரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

பாஜக செய்தால் மட்டும் தவறா? பட்ஜெட்டில் மாநிலங்களின் பெயர் இடம்பெறவில்லை என்றால் அவை புறக்கணிக்கப்பட்டதாக இல்லை. சிலர் கூறிய தவறான கருத்துகள் எனக்கு ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தவறான கருத்துகளைப் பரப்பும் செயலில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன. தவறான புரிதலோடு சிலர் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர் எனக் கூறினார்.

மேலும், தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து ஆர்வம் கொண்டு பேசிய அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வரலாற்று சிறப்புமிக்க வகையில், மூன்றாவது முறையாக நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியைத் தேர்வு செய்ததற்காக மக்களுக்கு நன்றி. 2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்காக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம் என நிர்மலா சீதாராமன் பேசினார்.