சந்தன கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையில், அதிரடிப் படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கக் கோரியது தொடர்பான விவகாரத்தில் தேசிய மனித உரிமை ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து தலைமை செயலாளர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
வீரப்பனைப் பிடிப்பதற்காக கடந்த 1995 ம் ஆண்டு தமிழ்நாடு சிறப்பு அதிரடிப் படை அமைத்து மலையோர கிராமங்களில் தேடி வந்தனர். பின்னர் 2004 ம் ஆண்டு ஏடிஜிபி விஜயகுமார் தலைமையிலான சிறப்பு அதிரடி படையினர் வீரப்பனை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது, மலையோர கிராம மக்கள் மீது விசாரணை என்ற பெயரில் சிறப்பு அதிரடிப் படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தேசிய மனித உரிமை ஆணையம் சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டன. இந்த புகாரின் அடிப்படையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையமானது அப்பகுதியை சேர்ந்த 243 மக்கள், பாதிக்கப்பட்ட193 பேர், 4 தனியார் தொண்டு நிறுவனங்கள், காவல்துறையை சேர்ந்த 38 பேரிடம் விசாரித்தது.
இந்த ஆணையத்தின் விசாரணையின் அடிப்படையில் சிறப்பு அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட 89 பேருக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு, கர்நாடக அரசுக்கும் உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவின்படி, தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1 கோடியே 20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடும், காவிரிபுரம், லக்கம்பட்டி கிராம மக்களுக்கு 8 கோடியே 64 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயில் பல்வேறு திட்டங்களை செய்துள்ளது. இதை பதிவு செய்து தேசிய மனித உரிமை ஆணையம் இந்த விசாரணையை கடந்த 2009 ம் ஆண்டு நிறைவு செய்தது.
இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள விடியல் மக்கள் நல்வாழ்வு அமைப்பு சார்பில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போதைய பண மதிப்பின் படி இழப்பீட்டு தொகையை அதிகரித்து வழங்க கோரி 2021 ம் ஆண்டு தேசிய மனித உரிமை ஆணைத்திற்கும், தமிழக தலைமை செயலாளருக்கு மனு அளிக்கப்பட்டது. அந்த அமைப்பின் சார்பில் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தனியார் தொண்டு நிறுவனம் அளித்த மனு மீது பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி தேசிய மனித உரிமை ஆணையம், விடியல் மக்கள் நல்வாழ்வு அமைப்பின் கோரியை ஏற்று கூடுதலாக 3 கோடியே 79 லட்சத்து 49ஆயிரத்து 976 ரூபாயை இழப்பீடாக செலுத்த தமிழக கர்நாடக தலைமை செயலாளர்களுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது.
தேசிய மனித உரிமை ஆணையத்தின் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழக தலைமை செயலாளர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ் எஸ் சுந்தர், செந்தில் குமார் அமர்வில் இன்று விசாரனைக்கு வந்தது. அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் குமரேசன், அரசு வழக்கறிஞர் பி.ஹரிஷ் ஆஜராகி வாதிட்டனர். இதை பதிவு செய்ய நீதிபதிகள் கூடுதல் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட தேசிய மனித உரிமை ஆணைய உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர், மேலும் இந்த வழக்கு தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.