நிவாரணப் பணிகளுக்கு ரூ.5 கோடி வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பினராயி விஜயன் நன்றி கூறியுள்ளார்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் 30-ந் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பூஞ்சிரித்தோடு, முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை ஆகிய கிராமங்கள் சின்னாபின்னமாகின. நிலச்சரிவில் சிக்கி இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 357-ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 200 பேரை கண்டறிய முடியவில்லை என்பதால் மீட்பு பணிகள் தொடர்ந்து 6-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது.
இதற்கிடையில், வயநாடு நிலச்சரிவு நிவாரண பணிகளுக்கு கேரள அரசுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ,5 கோடி வழங்கப்பட்டது. 5 கோடிக்கான காசோலையை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் நேரில் வழங்கினார்.
இந்த நிலையில், நிவாரணப் பணிகளுக்காக ரூ.5 கோடி வழங்கிய தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிப்பில், “நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் நிவாரணப் பணிகளுக்கு ரூ.5 கோடி தாராளமாக வழங்கிய தமிழக அரசு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றிகள். உங்களின் ஆதரவும், ஒற்றுமையும் மிகவும் பாராட்டப்பட்டதுடன், மறுவாழ்வு மற்றும் மறுகட்டமைப்பு முயற்சிகளுக்கு பெரிதும் உதவும்” என்று தெரிவித்துள்ளார்.