வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ராகுல் காந்தி தனது தங்கை பிரியங்கா காந்தியுடன் நேரில் சென்று பார்வையிட்டார். இந்த வேளையில் ராகுல் காந்தியின் காரை மறித்து அங்குள்ளவர்கள் வாக்குவாதம் செய்த வீடியோ தற்போது வெளியாகி வேகமாக பரவி வருகிறது. அதில் ராகுல் காந்தியை எம்பியாக்கியது நாங்கள் தான். சகதியில் இறங்கினால் கால்கள் அழுக்காகிவிடும் என நினைத்து காரில் ராகுல் காந்தி பயணிக்க வேண்டும் என்றால் அவர் ஏன் இங்கு வந்தார்? என ஒருவர் ஆக்ரோஷமாக கேள்வி கேட்டுள்ளார்.
கேரளாவில் வயநாடு மாவட்டத்தில் கடந்த 30ம் தேதி நள்ளிரவில் கனமழையின் காரணமாக அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முண்டக்கை, மேப்பாடி, சூரல்மலை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட இடங்கள் பாதிக்கப்பட்டன. நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை என்பது 357யை கடந்துள்ளது. மேலும் 206 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை. இவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இன்று 6வது நாளாக மீட்பு பணி நடந்து வருகிறது. தற்போது நிலச்சரிவு ஏற்பட்ட கிராமங்கள் வயநாடு லோக்சபா தொகுதிக்கு உட்பட்டதாகும். இந்த வயநாடு லோக்சபா தொகுதியில் இருந்து ராகுல் காந்தி 2 முறை எம்பியாகி இருந்தார். இன்னும் சொல்லப்போனால் ராகுல் காந்தியின் அரசியல் வாழ்க்கையை காப்பாற்றியதே இந்த தொகுதி தான். அதாவது கடந்த 2019 லோக்சபா தேர்தலில் ராகுல் காந்தி தனது குடும்பத்தினர் பாரம்பரிய தொகுதியான உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து மாஜி மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி போட்டியிட்டார். அங்கு ராகுல் காந்தி தோற்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில் அவர் 2வது தொகுதியாக வயநாட்டை தேர்வு செய்தார். அதேபோல் 2019 லோக்சபா தேர்தலில் அமேதியில் தோற்ற ராகுல் காந்தி, வயநாட்டில் வெற்றி பெற்றார். ஒருவேளை வயநாட்டில் அவர் போட்டியிடாமல் போய் இருந்தால் அவரது அரசியல் எதிர்காலத்தில் சற்று பின்னடைவு ஏற்பட்ட இருக்கும்.
அதன்பிறகு சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ராகுல் காந்தி மீண்டும் வயநாடு மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தின் தாய் சோனியா காந்தி எம்பியாக இருந்த ரேபரேலியில் போட்டியிட்டார். இதில் 2 தொகுதிகளிலும் ராகுல் காந்தி வென்ற நிலையில் வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்து ரேபரேலி எம்பியாக தொடர்கிறார். இதனால் வயநாட்டில் மீண்டும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியின் தங்கை பிரியங்கா காந்தியை காங்கிரஸ் களமிறக்கலாம் என்று கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் ராகுல் காந்தி நிலச்சரிவு பாதிப்புகளை பார்வையிட சென்றபோது தனது தங்கை பிரியங்கா காந்தியை கடந்த 1ம் தேதி அழைத்து சென்றார். மீட்பு பணிகள் பற்றி மீட்பு குழுவினரிடம் கேட்டறிந்த ராகுல் காந்தி, முகாம்களில் தங்கியிருப்பவர்களை சந்தித்து ஆறுதல் அளித்தார். அதன்பிறகு டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, ‛‛நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் சார்பில் 100 வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும்” என்று அறிவித்தார்.
இந்நிலையில் தான் தற்போது இணையதளத்தில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதாவது வயநாடு நிலச்சரிவு பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற ராகுல் காந்திக்கு இளைஞர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார். ராகுல் காந்தி காரின் முன்பகுதியில் அமர்ந்து இருந்தபடி பயணம் செய்த நிலையில் வேகமாக ஓடிய நபர், ‛‛ராகுல் காந்தி கீழே இறங்கி சகதியில் நடக்கமாட்டாரா?” என கேள்வி கேட்கும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. அதாவது ராகுல் காந்தி காரில் அமர்ந்து பயணித்தபோது ஒருவர் பின்னால் இருந்து ஓடிவருகிறார். அவர், அண்ணே அண்ணே.. காரை நிறுத்த சொல்லுங்க என கூச்சலிட்டபடி வருகிறார். இதையடுத்து டிரைவர் காரை நிறுத்துகிறார். அப்போது அந்த நபர், ‛‛அவருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தவர்கள் நாங்கள் தான். அவர் இங்கு எம்பியாக இருந்தவர். காரை விட்டு இறங்கி சேற்றில் நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் அவர் ஏன் இங்கு வந்தார்? கீழே இறங்காமல் காரில் இருந்தபடி பார்க்க என்ன இருக்கிறது?” என கேள்வி எழுப்புகிறார். இந்த வேளையில் ராகுல் காந்தி அமைதியாக அந்த நபரை பார்த்தபடி காரில் உட்கார்ந்து இருப்பது வீடியோவில் பதிவாகி உள்ளது.
அதேபோல் இன்னொருவர், ‛‛நாங்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம். இப்போது அவரது வருகையால் நாங்கள் மணிக்கணக்கில் பசியுடன் இருக்கிறோம் விஐபி என்ற வகையில் அவரது வருகைக்காக அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மூடப்பட்டுள்ளன. உணவு, தண்ணீர் கொண்டு வரும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன” என தெரிவிக்கின்றனர்” என தெரிவிக்கும் வீடியோ தற்போது வேகமாக பரவி வருகின்றன.