தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவின்றி இருப்பதாக எதிர்க் கட்சிகள் கூறி வருவதைத் தொடர்ந்து 2029-ல் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
மணிமஜ்ரா 24 மணி நேர நீர் வழங்கும் திட்டத்தைத் இன்று தொடங்கி வைத்த அமித் ஷா, அந்தக் கூட்டத்தில் பேசியதாவது:-
எதிர்க்கட்சிகள் என்ன சொன்னாலும் அதைக் குறித்து நீங்கள் கவலைப்படாதீர்கள். நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். வருகிற 2029-லும் தேசிய ஜனநாயகக் கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும், மோடியே திரும்பப் பிரதமராக வருவார்.
எதிர்க்கட்சியினர் தேர்தலில் கொஞ்சம் வெற்றி பெற்றதாக நினைத்து வருகின்றனர். ஆனால், கடந்த 3 மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் வென்ற மொத்தத் தொகுதிகளை விட 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக வென்ற தொகுதிகள் அதிகம் என அவர்களுக்குத் தெரியவில்லை. மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒரு கட்சியான பாஜக வெற்றிபெற்ற மொத்த தொகுதிகள் எண்ணிக்கை எதிர்க்கட்சியினரின் மொத்தக் கூட்டணி வென்ற தொகுதிகளை விட அதிகம்.
இந்த ஆட்சியை நிலையற்றதாக ஆக்க விரும்பும் இவர்கள், இந்த அரசு நிலைக்காது என்று திரும்பத் திரும்பக் கூறி வருகிறார்கள். எதிர்க்கட்சியினருக்கு நான் உறுதியளிக்கிறேன். தற்போதைய அரசு ஐந்து ஆண்டுகள் முழுவதும் ஆட்சியில் இருக்கும். அடுத்த ஆட்சிக் காலமும் இதே அரசின் ஆட்சி இருக்கும். எதிர்க்கட்சியினர் எவ்வாறு திறம்பட செயல்பட வேண்டுமெனக் கற்றுக்கொள்ளத் தயாராக இருங்கள். இவ்வாறு அமித் ஷா பேசியுள்ளார்.