செந்தில் பாலாஜியின் வழக்கில் அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ 67 கோடி பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக தகவல்கள் அடங்கிய பென் டிரைவ் தனது வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை கூறிய நிலையில் அந்த கோப்புகளை காட்டுமாறு அமலாக்கத் துறைக்கு உத்தரவிடுமாறு செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். அதில் செந்தில் பாலாஜியின் வீட்டிலிருந்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாகவும் அதில் அவருக்கு எதிரான ஆதாரங்கள் இருப்பதாகவும் அமலாக்கத் துறை வாதிட்டு வந்தது. இந்த நிலையில் தன்னை கைது செய்த போது அது போன்ற சில ஆவணங்களை அமலாக்கத் துறை குறிப்பிடாத நிலையில் இப்போது மட்டும் எங்கிருந்து அந்த ஆதாரங்கள் வரும் என செந்தில் பாலாஜி தரப்பு கேள்வி எழுப்பியிருந்தது. அதிலும் முக்கியமாக போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ 67 கோடியை செந்தில் பாலாஜி மோசடி செய்ததற்கான ஆதாரம் அவருடைய வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பென் டிரைவில் இருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அந்த ஆதாரத்தை காட்டுமாறு அமலாக்கத் துறை உத்தரவிடக் கோரி செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் ஓகா மற்றும் மாஷி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. கடந்த முறை நடந்த விசாரணையின் போதே செந்தில் பாலாஜியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பென் டிரைவை அமலாக்கத் துறை காட்ட வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சோயப் ஹுசைன் கூறுகையில், இந்த வழக்கை உணவு இடைவேளைக்கு பிறகு விசாரிக்க வேண்டும். இல்லாவிட்டால் நாளைக்கு ஒத்தி வைக்க வேண்டும் என வாய்தா கேட்டார்.

அப்போது நீதிபதிகள் ஒரே விஷயத்தை உணவு இடைவேளைக்கு பிறகும் இந்த கோர்ட் விசாரிப்பதை ஏற்க முடியாது என்றார். அப்போது செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் முகுல் ரோத்தகியும் பென் டிரைவில் இல்லாத ஒரு ஆவணத்தை காட்டுவதாக கூறி இதுவரை அமலாக்கத் துறை 8 முறை இந்த வழக்கை ஒத்தி வைத்துள்ளது என்றார். இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியின் வழக்கு தற்போது தொடங்கியது. அது போல் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்துள்ளது.