இந்தியா, இலங்கை பிரதிநிதிகள் சந்திப்பை ஏற்படுத்தி மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரிடம் அண்ணாமலை தலைமையிலான மீனவர்கள் கோரிக்கை மனு வழங்கினர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் தமிழக மீனவர் பிரதிநிதிகள் நேற்று டெல்லி சென்றனர். டெல்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பான மனுவை வழங்கினர். அப்போது, சர்வதேச ஆழ்கடல் பகுதியில் இலங்கை கடற்படை படகு மோதி உயிரிழந்த மீனவர் மற்றும் காணாமல் போன மற்றொரு மீனவர் குறித்தும், ராமநாதபுரத்தில் மீனவர்கள் போராட்டம் குறித்தும் பேசப்பட்டது. காணாமல் போன மீனவரை விரைந்து கண்டுப்பிடிக்க நடவடிக்கை எடுக்கவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழக்கூடாது என்றும் அப்போது மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இந்திய மீனவர்கள் அனைவரையும் விரைவாக மீட்டு தர வேண்டும். இந்திய,இலங்கை பிரதிநிதிகள் சந்திப்பை இந்திய அரசு ஏற்படுத்தி தர வேண்டும். பணியில் இருக்கும்போது மரணம் ஏற்பட்டால் மீனவர்களுக்கு இழப்பீடு கிடைக்கும் வகையில், விபத்துக்கள் அல்லாத ஆயுள் பாதுகாப்பு திட்டம் வேண்டும். மீனவர்களுக்கு டீசலுக்காக வழங்கப்படும் மானியம் அதிகரிக்கப்பட வேண்டும். 25 ஆண்டுகளாக மீனவர்கள் சேகரிக்கத் தடை செய்யப்பட்ட கடல் வெள்ளரிக்கான தடையை நீக்க வேண்டும். ஃபைபர் படகுகளுக்கு கூடுதலாக மானியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இந்த சந்திப்பின்போதே இலங்கையின் தூதரை வரவழைத்து தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் இனி நடைபெறக் கூடாது என கடுமையான கண்டனத்தை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
தொடர்ந்து, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மீனவ பிரதிநிதிகளிடம் பேசியதாவது:-
கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் இலங்கைக் கடற்படையின் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளன. மேலும் 273 தமிழக மீனவர்கள் இலங்கைகடற்படையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 204 மீனவர்கள் விடுவிக்கப்பட்டு பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இலங்கை காவலில் மீதமுள்ள 69 மீனவர்களில், 61 பேர் நீதிமன்றகாவலிலும் 8 பேர் தண்டனை கைதிகளாகவும் இருக்கிறார்கள். 3 விசைப்படகு உரிமையாளர்களுக்கு அபராதம் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்துக்கும் சுமூகமாக தீர்வுகள் காணப்பட்டு அனைவரும் தமிழகத்துக்கு பாதுகாப்பாக அழைத்து வரப்படுவார்கள்.
இந்திய அரசின் தரப்பில் வெளியுறவுத் துறை, மீன்வளத் துறை அதிகாரிகள் 4 பேரும் இலங்கை அரசு தரப்பில் 4 அதிகாரிகள் இணைந்து செயல்படும் குழுஅமைத்து மீனவர்கள் பிரச்சினைகளை தீர்த்து வருகிறோம். இந்த இருதரப்பு ஆய்வுக்குழு விரைவில் கூட இருக்கிறது. அப்போது அனைத்து பிரச்சினைகளும் சுமூகமாக தீர்க்கப்படும். மீனவர்களின் குறைகளுக்கு உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது பாஜக மாநில பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி, மாநில மீனவர் அணித்தலைவர் முனுசாமி, ராமநாதபுரம் மாவட்ட தலைவர் தரணி முருகேசன், நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள், வெளியுறவுத் துறை அதிகாரிகள், மீனவளத் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.