இணையதள வாயிலாக கட்டட வரைபட அனுமதி பெறுவதற்கான கட்டணங்களை திடீரென்று இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்த்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
திமுக தலைமையிலான அரசு சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் வீடு கட்டுவதற்கான வீட்டு வரைபட அனுமதிக் கட்டணத்தை எவ்வித அறிவிப்பும் இன்றி, திடீரென்று இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்த்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதன் மூலம் ஏழை, எளிய, சாமானிய, நடுத்தர மக்கள் சொந்த வீடு கட்டுவதும், புதிய வீடு வாங்குகின்ற கனவும் கேள்விக்குறியாகியிருப்பது திமுக தலைமையிலான அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு சான்றாக அமைந்துள்ளது.
தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றது முதல் சொத்துவரி உயர்வு, பத்திர பதிவு கட்டண உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு, நிலங்களின் வழிகாட்டு மதிப்பு உயர்வு, மின் கட்டண உயர்வு என பல்வேறு வழிகளில் மனசாட்சியின்றி மக்களிடமிருந்தே வசூலித்து அவர்களை நாள்தோறும் கசக்கி பிழிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது வீடு கட்டுவதற்கான வீட்டு வரைபட அனுமதிக் கட்டணத்தையும் 112% அளவுக்கு இருமடங்கிற்கும் மேலாக அதிகரித்து இருப்பதால் புதிய வீடுகளின் விலை தாறுமாறாக அதிகரிக்கும், சொந்தமாக வீடு கட்டுவதற்கும் இயலாத நிலை ஏற்படும் என சாமானிய, நடுத்தர மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் சாமானியர்கள் புதிய வீடு ஒன்றை கட்டவேண்டுமென்றால் ஏற்கனவே பல்வேறு வகையில் சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. அதிலும் குறிப்பாக கட்டடத்திற்கான அனுமதி பெறுவதே பெரும் சவாலாக அமைந்துள்ளது. திமுக கட்சியினரின் ஆசிர்வாதம் இல்லையென்றால் உள்ளாட்சிகளிலும் பிற துறைகளிலும் வீட்டிற்கான அனுமதி பெறுவதில் இரண்டு, மூன்று ஆண்டுகள் வரை காத்திருக்கும் சூழல் உருவாகிவிட்டது. எப்படியாவது அனுமதி பெற்று வீடு கட்ட ஆரம்பித்தால், உடனே திமுகவை சேர்ந்த கவுன்சிலர்களும், அவரது ஆதரவாளர்களும் வந்து பணம் கேட்டு மிரட்டுகின்றனர். இவற்றையெல்லாம் சமாளித்து ஒருவர் தமிழகத்தில் சொந்த வீடு கட்டுவது என்பது தெய்வச்செயலால் மட்டுமே நடக்கும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து நிலை உள்ளாட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் 2500 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவிலான நிலத்தில், 3500 சதுர அடி வரையிலான பரப்பளவில் வீடு கட்டுவதற்கு ஆன்லைனில் அனுமதி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கடந்த மாதம் கொண்டு வந்தது. அதற்கான கட்டணங்கள் 100% வரை உயர்த்தபட்டன. அதைத் தொடர்ந்து பிற அளவிலான கட்டிடங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் கட்டிட அனுமதி பெறுவதற்கான கட்டணத்தையும் தமிழக அரசு உயர்த்தியிருக்கிறது. அதாவது, சென்னை மாநகராட்சியில், சதுர அடிக்கு 100 ரூபாய் எனவும் பிற மாநகராட்சிகளில் சதுர அடிக்கு 74 முதல் 88 ரூபாய் எனவும், நகராட்சிகளில் சதுர அடிக்கு 70 முதல் 74 ரூபாய் என்ற அளவிலும் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மேலும், பேரூராட்சிகளில் சதுர அடிக்கு 45 முதல் 70 ரூபாய் எனவும்,ஊராட்சிகளில் சதுர அடிக்கு 15 முதல் 27 ரூபாய் வரை எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியில் வீடு கட்டுவதற்கு இதுவரை ஒரு சதுர அடிக்கு 46 ரூபாயாக இருந்ததை தற்போது 100 ரூபாயாக 112% அளவுக்கு உயர்த்தியிருக்கிறது. இதன்படி சென்னை மாநகராட்சியில் 8,900 சதுர அடி பரப்பளவில் வீடு கட்டுவதற்கான கட்டிட அனுமதி கட்டணம் ரூ.4.5 லட்சத்திலிருந்து ரூ. 9.54லட்சமாக அதிகரித்திருக்கிறது. இது கட்டிடம் கட்டுவதற்காக ஆகும் செலவில் கிட்டத்தட்ட 10சதவிகிதம் ஆகிறது. இதன் மூலம் ஏழை எளிய சாமானிய, நடுத்தர மக்கள் சொந்த வீடு கட்டுவது என்பது வெறும் கனவாகவே போய்விடும்.
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக்காலத்தில் இதைவிட குறைவான மாநில வருவாயை வைத்துக்கொண்டுதான் அனைத்தையும் சமாளித்ததோடு ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களையும் கொடுத்தார்கள். ஆனால் திமுக தலைமையிலான அரசோ, தனது நிர்வாகத்திறமையின்மையால் இவ்வாறு தமிழக மக்களின் தலையில் தொடர்ந்து சுமையை ஏற்றுவது எந்தவிதத்தில் நியாயம்? இதனை திராவிட மாடல் அரசு என்று சொல்லிக்கொண்டு திராவிடத்தையும், நம் திராவிட தலைவர்களையும் இழிவுபடுத்துவது மிகவும் வேதனையளிக்கிறது.
எனவே, திமுக தலைமையிலான அரசு தனது மூன்றரை ஆண்டுகால ஆட்சியில் தமிழக மக்களை வதைத்தது போதும், இனி எஞ்சியிருக்கும் ஆட்சிக்காலத்திலாவது தமிழக மக்களை வஞ்சிக்காமல் அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படவேண்டும். மேலும், தமிழகத்தில் ஏழை, எளிய, சாமானிய, நடுத்தர மக்கள் யாராலும் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு உயர்த்தப்பட்ட, வீடு கட்டுவதற்கான கட்டிட வரைபட அனுமதி கட்டணத்தை திமுக தலைமையிலான விளம்பர அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.