வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு பாஜக கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.
வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாக ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் மக்களவையில் பேசினர். இது வக்பு வாரியத்தின் செயல்பாட்டில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டது என்றும், மசூதிகள் விவகாரத்தில் தலையிடும் முயற்சி அல்ல என்றும் அவர்கள் கூறினர்.
மக்களவையில் மசோதாவை ஆதரித்துப் பேசிய ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான ராஜீவ் ரஞ்சன் சிங், “இந்த மசோதா முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. இந்த மசோதா முஸ்லிம்களுக்கு எதிரானது என பல உறுப்பினர்கள் உரக்க பேசினார்கள். இது எப்படி முஸ்லிம்களுக்கு எதிரானது? இங்கே பேசியவர்கள் அயோத்தி விவகாரத்தை உதாரணமாகக் காட்டினார்கள். கோயிலுக்கும் நிறுவனத்துக்கும் வித்தியாசம் கிடையாதா? இது மசூதிகளில் தலையிடும் முயற்சியல்ல. இந்தச் சட்டம் வக்பு வாரியம் எனும் நிறுவனத்தின் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவே.
வக்பு வாரியம் எப்படி உருவாக்கப்பட்டது? அது ஒரு சட்டத்தின் மூலம். சட்டத்தின் மூலம் நிறுவப்படும் எந்தவொரு நிறுவனமும் எதேச்சதிகாரமாக மாறும். வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்த ஒரு சட்டத்தை கொண்டு வர அரசுக்கு உரிமை உள்ளது. இங்கு மத பிளவு இல்லை. எதிர்க்கட்சிகள் வதந்திகளை பரப்புகிறார்கள். 1984 சீக்கியர்களுக்கு எதிராக கலவரத்தில் ஈடுபட்டவர்கள் யார்? ஆயிரக்கணக்கான சீக்கியர்களை கொன்றது யார்? இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும்; வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.
வக்பு மசோதா குறித்து பேசிய தெலுங்கு தேசம் கட்சி எம்பி ஹரிஷ் பாலயோகி, “இந்த மசோதாவை மிகுந்த அக்கறையுடன் அரசு கொண்டு வந்திருப்பதை நான் பாராட்டுகிறேன். நன்கொடைகள் எதற்காக கொடுக்கப்பட்டனவோ அந்த நோக்கம் பாதுகாக்கப்பட வேண்டும். நோக்கமும் அதிகாரமும் தவறாகப் பயன்படுத்தப்படும்போது சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதும், அமைப்பில் வெளிப்படைத்தன்மையை அறிமுகப்படுத்துவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும். இதை கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மசோதாவை நாங்கள் ஆதரிக்கிறோம்.
நாட்டின் ஏழை முஸ்லிம்கள் மற்றும் பெண்களுக்கு இது உதவும்; வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவரும் என்று நாங்கள் நம்புகிறோம். ஒருவேளை ஆலோசனைக்காக இந்த மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக் குழுவுக்கு அனுப்பப்படுமானால், அது குறித்து எங்கள் கட்சி கவலைப்படாது. தவறான கருத்துகள், தவறான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்கவும், மசோதாவின் நோக்கத்தை அறிந்துகொள்ளவும் பரந்த ஆலோசனைகள் தேவைப்பட்டால், அதை தேர்வுக் குழுவுக்கு அனுப்புவதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை” என்று அவர் கூறினார்.
இதனிடையே, சச்சார் கமிட்டி பரிந்துரைகளின் அடிப்படையிலேயே வக்பு சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டிருப்பதாகவும், மத சுதந்திரத்தில் தலையிடும் நோக்கம் இதில் இல்லை என்றும் மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் தெரிவித்தார். இந்த மசோதாவை ஆதரித்துப் பேசிய மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “இந்த மசோதா மூலம், எந்த மத அமைப்பின் சுதந்திரத்திலும் தலையிட முடியாது. யாருடைய உரிமையையும் இது பறிக்காது. உரிமைகளைப் பெறாதவர்களுக்கு உரிமைகளை வழங்குவதற்காக இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட சச்சார் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் இந்த மசோதா இன்று கொண்டு வரப்படுகிறது. இந்த மசோதாவை எதிர்ப்பதை நிறுத்துங்கள். யார் எதிர்த்தாலும், யார் ஆதரித்தாலும் சரி இது வரலாற்றில் இடம்பெறும். மசோதாவை எதிர்க்கும் முன், ஆயிரக்கணக்கான ஏழைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பற்றி சிந்தித்து அவர்களுக்கு மதிப்பு கொடுங்கள்” என வலியுறுத்தினார்.
முன்னதாக இந்த மசோதாவை எதிர்த்துப் பேசிய காங்கிரஸ் எம்.பி கே.சி.வேணுகோபால், “இந்த மசோதா கூட்டாட்சி முறை மீதான வலிமையான தாக்குதல். வக்பு சொத்துகள் தொடர்பான தரவுகளை சேகரிக்கும் பணிகளை மாநிலங்கள் கவனித்துக் கொள்கின்றன. இந்த மசோதா அனைத்து தரவுகள் சேகரிக்கும் பணியையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு செல்லும். இது மத சுதந்திரத்தின் மீதான தாக்குதல்” என்று எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்த மசோதா தொடர்பாக பேசிய சமாஜ்வாதி கட்சி எம்பி மொஹிபுல்லா, “மற்ற மதத்தினரின் சட்டப்பூர்வ அமைப்புகளில் அந்தந்த மதத்தினர் மட்டுமே பிரதிநிதிகளாக இருக்க வேண்டும் எனும்போது, ஏன் முஸ்லிம்கள் இருக்கக் கூடாது. முதல் வக்பு வாரியம் மெக்காவில் உள்ளது. அது குறித்தும் கேள்வி எழுப்புவோமா? இது ஒரு பெரிய தவறு. இதற்கான விலையை நாம் பல நூற்றாண்டுகளுக்கு கொடுக்க வேண்டி இருக்கும்” என தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்துப் பேசிய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் லாலன் சிங், “வழிபாட்டுத் தலங்களுக்கும் சட்டபூர்வ அமைப்புகளுக்கும் வித்தியாசம் உள்ளது. இந்த அவையில் உள்ளவர்கள் வக்பு வாரியங்களை கோயில்களுடன் ஒப்பிடுகிறார்கள். ஆனால், அவை வேறுபட்டவை. இது மசூதிகளை ஒழுங்குபடுத்தும் முயற்சி அல்ல. வக்பு வாரியங்கள் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட அமைப்புகள். இந்தத் திருத்தம் அதில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று கூறினார்.
மசோதா தொடர்பாக பேசிய மகாராஷ்டிர எம்பி சுப்ரியா சுலே, “வருத்தம் என்னவென்றால் இந்த மசோதாவை நாங்கள் நாடாளுமன்றத்தின் மூலமாக அறியவில்லை. ஊடகங்கள் மூலமாகவே அறிந்துகொண்டோம். இது அரசாங்கத்தின் புதிய வழியா?” என்று கேள்வி எழுப்பினார். மேலும் அவர், “நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் கோவில். நாங்கள் எங்கள் வேலையை தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகங்களுக்கு மசோதாக்களை கசியவிடுவதற்கு முன் தயவுசெய்து எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்” என்றார்.
இதனை மறுத்த சபாநாயகர் ஓம் பிர்லா, இந்த மசோதா அனைத்து எம்.பி.க்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்தத் திருத்தங்களைச் செய்வதற்கு இந்த சபைக்கு தகுதி இல்லை என்று எம்பி அசாதுதீன் ஒவைசி கூறினார். இது அரசியலமைப்பின் 14, 15 மற்றும் 25 ஆகியவற்றின் கொள்கைகளை மீறுவதாகக் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். “ஒரு சொத்தை வக்பு நிர்வகித்தல் என்பது முஸ்லிம்களுக்கு இன்றியமையாத மத நடைமுறையாகும். அதற்கு சட்டபூர்வ அங்கீகாரத்தை மறுப்பதன் மூலம் முஸ்லிம்கள் தங்கள் வக்ஃப் சொத்துகளை எவ்வாறு நிர்வகிப்பது? அரசாங்கம் கடுமையாகக் கட்டுப்படுத்த முற்பட்டுள்ளது. நீங்கள் முஸ்லிம்களின் எதிரி. அதற்கு இந்த மசோதா ஆதாரம்” என்று கடுமையாக அசாதுதீன் ஒவைசி எதிர்த்தார்.
