நாகை – இலங்கை இடையே வரும் 15 ஆம் தேதி முதல் மீண்டும் கப்பல் சேவை!

நாகை – இலங்கை இடையே வரும் 15 ஆம் தேதி முதல் மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது.

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைக்கு 40 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது. இந்த கப்பல் சேவையை பிரதமர் மோடி காணொளி மூலம் தொடங்கி வைத்தார். செரியாபாணி என்ற கப்பல் நாகப்பட்டினத்தில் இருந்து இருந்து இலங்கையின் காங்கேசன் துறைக்கு இயக்கப்பட்டது.

காலையில் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து புறப்படும் பகல் 12 மணிக்குள் இலங்கையின் காங்கேசன் துறையை சென்றடையும். பின்னர் மாலை 3 மணி அளவில் காங்கேசன் துறையில் இருந்து புறப்படும் இந்த கப்பல் மாலை 6 மணி அளவில் நாகப்பட்டினத்தை வந்தடையும் வகையில் பயணத் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. இந்த கப்பல் சேவையால் வியாபரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் விசா அனுமதி, பயணக் கட்டணம், கடல் கொந்தளிப்பு, குறைவான பயணிகள் போன்ற காரணங்களால் இந்த கப்பல் சேவை தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மீண்டும் நாகப்பட்டினம் – காங்கேசன் துறை இடையேயான கப்பல் சேவை எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

கடந்த ஜனவரி முதல் வாரத்தில் கப்பல் சேவை தொடங்கும் என தகவல் வெளியானது. ஆனால் அப்போது தொடங்கப்படவில்லை. பின்னர் கடந்த மே மாதம் கப்பல் சேவை தொடங்கும் என தகவல் வெளியானது. ஆனால் அப்போதும் சேவை ஒத்தி வைக்கப்பட்டதால் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். இதையடுத்து நாகை – காங்கேசன் துறை இடையே ஆகஸ்ட் மாதத்தில் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கும் என தகவல் வெளியானது.

இதற்காக அந்தமானில் இருந்து சிவகங்கை என்ற கப்பல் வரவழைக்கப்பட்டது. இந்த கப்பலின் சோதனை ஓட்டம் நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைக்கு நேற்று நடைபெற்றது. நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன் துறைக்கு சென்ற கப்பலுக்கு தண்ணீரை பீய்ச்சியடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த சிவகங்கை கப்பலில் சாதாரண வகுப்பில் 133 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு நபருக்கு 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரீமியம் வகுப்பில் 27 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், பயணிக்க ஒரு நபருக்கு 7,500 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த கப்பலில் பயணிகளுக்கு சாம்பார் சாதம், தயிர் சாதம், நூடுல்ஸ் உள்ளிட்ட துரித உணவுகளை கட்டணத்துடன் பெற்றுக்கொள்ள உணவக வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு நபர் 60 கிலோ வரை பார்சல் எடுத்துச் செல்லவும், 5 கிலோ வரை கைப்பையில் எடுத்துச் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டம் முடிந்த பிறகு பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.