கோவை சூலூர் விமானப் படைத்தளத்தில் கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த ‘தரங் சக்தி 2024’ எனும் பன்னாட்டு விமானப் படை கூட்டு பயிற்சி நிறைவு விழா இன்று (ஆக.13) நடந்தது.
இந்தியா, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த விமானப்படையினர் இணைந்து கோவையில் கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் கூட்டு விமான பயிற்சி மேற்கொண்டனர். இதன் நிறைவு விழா இன்று நடந்தது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு. இந்திய விமானப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்திய விமானப் படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர்கள், தேஜஸ், சுக்காய், மிக் ஆகிய போர் விமானங்களில் வீரர்கள் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தினர். ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டைபூன் ரக போர் விமானம் மற்றும் ரஃபேல் ஆகிய விமானங்களும் பங்கேற்றன.
நிறைவாக, கூட்டு விமான பயிற்சியில் பங்கேற்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த விமானப்படை தளபதிகளுக்கு ஆளுநர் நினைவுப் பரிசுகளை வழங்கி கெளரவித்தார். முன்னதாக விமானப்படைதள வளாகத்தில் தொடங்கப்பட்ட ராணுவ தளவாடங்கள் கண்காட்சியை ஆளுநர் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் மொத்தம் அமைக்கப்பட்டுள்ள 62 அரங்குகளில் பொதுத்துறை மற்றும் தனியார் உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு அதிநவீன தளவாட தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.