விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உரிய அனுமதியின்றி தேசியக் கொடியுடன் இருசக்கர வாகன பேரணி சென்ற பாஜக கிழக்கு மாவட்டத் தலைவர் உள்பட 24 பேர் கைது செய்யப்பட்டனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு விருதுநகர் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் அருப்புக்கோட்டையில் பாவடிதோப்பு பகுதியிலிருந்து நகர் பகுதியில் வெள்ளக்கோட்டை வரை தேசிய கொடியை ஏந்தி இருசக்கர வாகன பேரணிக்கு காவல் துறையிடம் அனுமதி கேட்டு மனு அளித்திருந்தனர். ஆனால், இப்பேரணிக்கு காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) அருப்புக்கோட்டையில் பாஜக-வினர் திட்டமிட்டபடி விருதுநகர் கிழக்கு மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன் தலைமையில், விருதுநகர் தேர்தல் மேற்பார்வையாளர் வெற்றிவேல் முன்னிலையில் பாஜகவினர் தேசியக் கொடியோடு இருசக்கர வாகன பேரணியாக பாவடி தோப்பிலிருந்து காசுக்கடை பஜார், மரக்கடை பஜார் வழியாக வெள்ளக்கோட்டையை அடைந்தனர்.
அங்கு போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி, அனுமதியில்லாமல் தேசியக் கொடியுடன் வந்த பாஜக-வினரை கண்டித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதையடுத்து, அனுமதியின்றி தேசியக் கொடியுடன் இருசக்கர வாகண பேரணி சென்ற பாஜக கிழக்கு மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன் உள்ளிட்ட 24 பேரை அருப்புக்கோட்டை நகர் போலீஸார் கைது செய்தனர்.