முதலீடு செய்துள்ளவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் தமிழக பாஜக உறுதி: அண்ணாமலை

மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவனத்தில், முதலீடு செய்துள்ளவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் தமிழக பாஜக உறுதியாக உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

வின் டிவி உரிமையாளர் தேவநாதன் மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக இருந்தபோது நிதி நிறுவன மோசடி செய்ததாக புகார் எழுந்தது. 140-க்கும் மேற்பட்டோர் புகார் கொடுத்ததன் அடிப்படையில் தேவநாதனை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இந்த நிறுவனத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு நிதி வைத்திருந்ததாகவும், பலர் உறுப்பினராகவும் இருந்ததாக கூறப்படுகிறது.

ரூ. 50 கோடி வரை மோசடி என எழுந்த புகாரில் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். மேலும் 525 கோடி ரூபாய் அளவிற்கான பணம் மாயமானதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் முடிவடைந்த மக்களவை தேர்தல் பாஜக கூட்டணியில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு தேவநாதன் தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தேவநாதன் கைது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது:-

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் நிறுவனத் தலைவர் தேவநாதன், தமிழகக் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கும் செய்தி அறிந்தேன். மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவனத்தில், முதலீடு செய்துள்ளவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் தமிழக பாஜக உறுதியாக உள்ளது. தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்தி, முதலீட்டாளர்கள் அனைவருக்கும் இதனை உறுதி செய்ய வேண்டும்.

அதே நேரத்தில், திமுக அரசின் சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகத் தோல்வியைச் சுட்டிக் காட்டும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளை அச்சுறுத்தும் முயற்சிகளில் இதுவும் ஒன்று என்றால், அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.