வங்கதேச கலவர பின்னணியில் ‘லஷ்கர்-இ-தொய்பா!

வங்கதேசத்தில் மாணவர்களால் துவக்கப்பட்ட போராட்டம் அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. உயிர்தப்பிய அவர் இந்தியாவில் தற்காலிகமாக தங்கியுள்ளார். இந்த போராட்டத்தில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு முக்கியப் பங்கு இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில், வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பவுத்தர்கள் மீது தாக்குதல் துவங்கி உள்ளது. அதிலிருந்து தப்பி இந்திய எல்லைகளில் நுழைய முயன்ற அவர்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். இந்துக்கள் மீதான தாக்குதலை தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான அன்சருல்லாஹ் பங்களா டீம் (ஏபிடி) முன்னின்று நடத்துவதாகக் கூறப்படுகிறது. இதன் பின்னணியில் சர்வதேச தீவிரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பா இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து இந்தியாவின் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் கூறும்போது, “அன்சருல்லாஹ் பங்களாவுடன் லஷ்கர்-இ-தொய்பா கடந்த 2022-ம்ஆண்டே கரம் கோத்துவிட்டது. இவர்கள் வங்கதேசத்தின் எல்லையிலுள்ள இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தாக்குதலுக்கு குறிவைத்துள்ளனர். திரிபுராவில் 2021-ல் மசூதிகள் தாக்குதலுக்கு உள்ளானது. இதையடுத்து, அம்மாநிலத்தின் இந்துக்களுக்கு அவர்கள் குறி வைத்துள்ளனர். வங்க தேசத்துடன் சேர்த்து திரிபுராவிலும் இந்துக்கள் தாக்கப்படும் அபாயம் இருப்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது” என்றனர்.

வங்கதேசத்தில் ஒரு பொதுநல அமைப்பின் பெயரில் ஏபிடி உருவானது. இதற்கு ஏற்பட்ட நிதிச் சிக்கலால் அப்போது வளர முடியாமல் முடங்கியது. பிறகு 2013-ல்அன்சருல்லாஹ் பங்களா டீம்எனும் பெயரில் மீண்டும் உருவெடுத்தது. தீவிரவாத நடவடிக்கை புகார்களால் ஷேக் ஹசீனா அரசு ஏபிடி-யை 2017-ல் தடை செய்தது.
ஏபிடியால் வங்கதேசத்தின் பல முக்கிய முஸ்லிம் தலைவர்கள் கொல்லப்பட்டனர். கடவுள் மறுப்பு கொள்கைகளை இணையத்தில் எழுதி வந்தவர்களையும் ஏபிடிவிட்டு வைக்கவில்லை. வங்கதேசத்தின் பிரபல வங்கியில் மூவரை சுட்டுக்கொன்றுவிட்டு அடிக்கப்பட்ட கொள்ளையிலும் ஏபிடிக்கு முக்கியப் பங்கிருப்பது அந்நாட்டின் நீதிமன்றங்களில் நிரூபணமானது.

இந்நிலையில், பின்லேடனின் அல்காய்தா அமைப்பின் கிளைகளில் ஒன்றாக ஏபிடி செயல்படுவதாகவும் புகார்கள் கிளம்பின. கிழக்காசியாவின் தீவிரவாத புள்ளி விவரங்களின்படி 2013 முதல் இதுவரை ஏபிடியின் தீவிரவாதிகள் 425 பேர் கைதாகி உள்ளனர். ஏபிடிக்கு தடை விதித்திருந்தபோதிலும் அது தொடர்ந்து ரகசியமாக வளர்ந்தது.

இந்நிலையில் ஆகஸ்ட் 5-ம் தேதிக்குப் பின்னர் வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களில் சிறுபான்மையினரான இந்துக்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர். அவர்களின் வீடுகள், உடைமைகள், கோயில்கள் சேதப்படுத்தப்பட்டன. இதனிடையே இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து தலைநகர் டாக்கா மற்றும் சிட்டகாங்கில் மாபெரும் கண்டனப் பேரணி நடைபெற்றது. இதுவரை வங்கதேசத்தில் உள்ள இந்து மற்றும் இதர சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக 205 தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் 5 இந்துக்கள் உயிரிழந்துள்ளனர்.

சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்து நிறுத்தும் நோக்கில், அந்நாட்டு இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் முகமது யூனுஸ் இந்து மாணவர்கள் மற்றும் பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். வங்கதேசத்தில் உள்ள இந்து, பவுத்தம், கிறிஸ்தவ ஒருங்கிணைப்பு கவுன்சில் தலைவர் டாக்டர் நீம் சந்திர பவுமிக், வங்கதேச பூஜா உட்ஜாப்பன் பரிஷத் அமைப்பின் தலைவர் வாசுதேவ்தர் ஆகியோர் முகமது யூனுஸை சந்தித்து தங்களது கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.

இந்நிலையில் நேற்று முகமது யூனுஸை, இந்து சிறுபான்மையினத் தலைவர்கள் சந்தித்துப் பேசினர். முன்னதாக டாக்காவில் உள்ள புகழ்பெற்ற கோயிலான தாகேஷ்வரி நேஷனல் கோயிலுக்கு, தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் வருகை தந்தார். அங்குள்ள இந்து அமைப்பின் தலைவர்கள், பொதுமக்களிடம் அவர் கலந்துரையாடினார். அப்போது அங்கு முகமது யூனுஸ் பேசும்போது, “வங்கதேச மக்கள் அமைதி காக்கவேண்டும். போராட்டம், வன்முறையில் ஈடுபடக்கூடாது. யாரும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தக்கூடாது. வன்முறை எதற்கும் தீர்வாகஅமையாது. முதலில் எங்களது அரசு என்ன செய்கிறது என்பதை கணிக்க எங்களுக்கு கால அவகாசம் தாருங்கள்” என்றார்.