வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.6 லட்சம் நிவாரணம்: பினராயி விஜயன்!

வயநாடு நிலச்சரிவில் 400க்கும் அதிகமானோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் நிவாரணம் அறிவித்திருக்கிறார்.

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 30ம் தேதி அதிகாலையில் வயநாடு மாவட்டம் மேப்பாடி அடுத்த சூரல்மலை பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவு ஏற்பட்டு இரண்டு மணி நேரத்தில், அதாவது அதிகாலை 4.30 மணியளவில் மேம்பாடிக்கு அருகில் உள்ள பகுதிகளில் மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மேப்பாடி, சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட கிராமங்கள் கடுமையாக பதிக்கப்பட்டன. மக்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது இந்த நிலச்சரிவு ஏற்பட்டதால், என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்கு கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. மேற்குறிப்பிட்ட பகுதியில் இருந்த வீடுகள் அனைத்தும் மண்ணால் மூடப்பட்டன. இதனையடுத்து தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், விமானப் படையினர் உள்ளிட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தற்போதுவரை 300க்கும் அதிகமானோர் பத்திரமாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

உயிரிழப்பை பொறுத்தவரை தொடக்கத்தில் 100-150 என்கிற அளவில்தான் இருந்தது. ஆனால் தற்போதைய நிலவரப்படி சுமார் 400ஆக அதிகரித்திருக்கிறது. கேரளா இதுவரை பார்த்திராத இயற்கை பேரழிவாக இது இருக்கிறது. எனவே இந்த துயரத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கேரள மாநில அரசும், காங்கிரஸ் கட்சியும் வலியுறுத்தி வருகின்றன. கேரள அரசு இந்த பேரழிவை மாநில பேரிடராக அறிவித்திருக்கிறது. ஆனால் மத்திய அரசுக்கு கேரள அமைச்சரவை கடிதம் எழுதியும், மத்திய அரசு இதனை தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மாநில முதல்வர் பினராயி விஜயன் நிவாரண உதவியை அறிவித்திருக்கிறார். அதாவது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.6 லட்சம் வழங்கப்படும். அதேபோல உடல் உறுப்புகளை இழந்தவர்களுக்கு ரூ.75 ஆயிரமும், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு மாதம் வாடகையாக ரூ.6000 வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். இதுவரை நிலச்சரிவிலிருந்து 233 உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும், 118 பேரை காணவில்லை என்றும், 206 உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது எனவும் பிணராயி விஜயன் கூறியிருக்கிறார்.