நமக்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற முதல்வரின் எண்ணத்துக்கு நேர்மாறாக தமிழகத்தை வஞ்சிக்க மத்தியில் ஆளும் பாஜக அரசு முயல்கிறது என்று வைகோ கூறினார்.
மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் மதிமுக சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக சென்னை, ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, மாவட்டச் செயலாளர்கள் சு.ஜீவன், கே.கழககுமார், டி.சி.ராஜேந்திரன், சைதை ப.சுப்பிரமணி, இணையதள அணி ஒருங்கிணைப்பாளர் மினர்வா ராஜேஷ் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், நீட் தேர்வை அமல்படுத்தியதற்கும், மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்காததற்கும் மத்திய பாஜக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் வைகோ பேசியதாவது:-
தமிழகத்தின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் மாநில அரசு நிதிநிலை அறிக்கையை தயார் செய்தது. நமக்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற முதல்வரின் எண்ணத்துக்கு நேர்மாறாக தமிழகத்தை வஞ்சிக்க மத்தியில் ஆளும் பாஜக அரசு முயல்கிறது. தமிழக வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ரூ.37,500 கோடி வேண்டும் என முதல்வர் கேட்ட நிலையில், மத்திய நிதிநிலை அறிக்கையில் ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. பாஜகவின் கூட்டணி ஆளும் ஆந்திரா, பிகாருக்கு கூடுதல் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஓரவஞ்சனை தானே. அதைப் போலவே சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு மாநில அரசு ரூ.12 ஆயிரம் கோடி ஒதுக்கிய நிலையில், மத்திய அரசு ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை. இது கட்சி பிரச்சினை அல்ல. தமிழகத்தின் உரிமை பிரச்சினை. நீட் தேர்வை அமல்படுத்தி தமிழகத்தின் 20 மாணவர்களின் உயிரை பறித்த பாஜக அரசு, ஒரு கொலைகார அரசு. இந்த 20 பேரும் ஒரு கட்சியை சேர்ந்தவர்களா? நீதிக்காக தங்களது உயிர்களை தந்திருக்கின்றனர்.
இதுவொருபுறம் இருக்க, மேகேதாட்டு அணையைக் கட்டுவதைத் தடுக்க முடியாது எனக் கர்நாடக அரசியல்வாதிகள் தொடர்ந்து சொல்லி வருகின்றனர். 2015-ம் ஆண்டு கர்நாடக அமைச்சர் வீட்டில் நடந்த கூட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் பங்கேற்று சதித்திட்டத்தைத் தீட்டினர். இதில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரோ அணை கட்டுவதைத் தடுக்க மாட்டோம் என்றார்.
இதேபோல், மத்திய அரசு செயல்படுத்த விரும்பும் மீத்தேன் உள்ளிட்ட வாயு எடுக்கும் திட்டங்கள் மூலம் டெல்டா மாவட்டத்தை மயான பூமி ஆக்கிவிடுவார்கள். நிரந்தரமான தீர்வே கிடைக்காது. அணைக் கட்டி முடித்த பிறகு கூச்சலிட்டு பயனில்லை. ராணுவத்தை வைத்து அணையைப் பாதுகாப்பார்கள். அணையைக் கட்ட விடக்கூடாது என்பதில் திமுக அரசு உறுதியாக இருக்கிறது. தமிழகத்தை வாழ வைப்பதற்கான திட்டங்களை மாநில அரசு செயல்படுத்துகிறது. அவர்களுக்குப் பக்க பலமாகத் தோழமை கட்சிகள் ஒரு சேர நிற்கும். இவ்வாறு அவர் பேசினார்.