பெண் மருத்துவர் கொல்லப்பட்ட கொல்கத்தா மருத்துவமனைக்குள் புகுந்து வன்முறை!

பெண் பயிற்சி மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குள் மர்ம நபர்கள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டு, அங்குள்ள உபகரணங்களை சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பெண் பயிற்சி மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில், நீதி கேட்டு மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். மேலும், இந்த கொலை வழக்கு விசாரணையை சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குள் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள், அங்கே இருந்த மருத்துவர்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்களை தாக்கினர். காவல்துறை வாகனங்களையும் அவர்கள் சேதப்படுத்தினர். பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. நிலைமையைக் கட்டுப்படுத்த போலீஸார் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீச வேண்டியிருந்தது. இச்சம்பவத்தில் 15 போலீஸார் காயமடைந்ததாக கொல்கத்தா போலீஸார் தெரிவித்தனர்.

கொல்கத்தா காவல்துறை முன்னதாகவே ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நாசவேலையில் ஈடுபட்டதாக சந்தேகித்த சிலரின் புகைப்படங்களை வெளியிட்டு, அவர்களைப் பற்றிய தகவல்களைத் தேடியது. இந்நிலையில், இது தொடர்பாக இன்று காலை 9 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த வன்முறையைக் கண்டித்து இந்திய மருத்துவ சங்கம் (Indian Medical Association ) அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், “இத்தகைய நாசவேலைகள் அராஜகத்தை சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளன. சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்ததற்கு மாநில அரசுதான் நேரடிப் பொறுப்பு. போராட்டத்தில் ஈடுபட்ட இளம் மருத்துவ மாணவர்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர். சிபிஐ விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, அதிகாரிகள் தங்களுடைய அலட்சியத்தால், மீண்டும் சட்டம் – ஒழுங்கைப் பாதுகாக்கத் தவறிவிட்டனர். இந்தச் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இது போன்ற வன்முறையால் முக்கியமான ஆதாரங்களை இழக்கவும் வாய்ப்புள்ளது. இந்திய மருத்துவ சங்கம் தனது அனைத்து மாநிலக் கிளைகளுடன் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தவிருக்கிறது” என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு இன்று பிற்பகல் சென்று நிலைமையை ஆய்வு செய்தார். அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களிடம் பேசிய அவர், மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நேற்று நடந்த சம்பவம் மிகவும் மோசமான சம்பவம் ஆகும். போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு நியாயம் கிடைக்க முயற்சி செய்வேன். மேற்கு வங்கத்தில் கடந்த 10 ஆண்டுகளில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. இளம்பெண்கள் பாதுகாக்கப்படாதது ஒட்டுமொத்த மனித குலத்துக்கே அவமானம். இது மாதிரியான செயல்களை இனி அனுமதிக்க முடியாது. இதுபோன்ற சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும்” என்றார். பின்னர் மாணவர்களிடம் பேசிய அவர், “நான் உங்களுடன் இருக்கிறேன். ஒன்றாக இணைந்து போராடுவோம். இதற்கான நீதி நிச்சயமாக கிடைக்கும். என் காதுகளும் கண்களும் திறந்தே இருக்கின்றன” என்று கூறினார்.