கோவை சூலூர் விமானப் படைக்கு எதிராக கொந்தளித்த கிராம மக்கள்!

கோவை மாவட்டம், காடம்பாடி ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் சூலூர் விமானப் படைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்டுமானங்கள் கட்ட தடையில்லா சான்று பெறுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளதால், தடையில்லா சான்று பெற வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கோவை மாவட்டம், சூலூர் பகுதியில் செயல்பட்டு வருகிறது பாதுகாப்புத் துறையின் சூலூர் விமானப்படை தளம். சூலூர் விமானப்படை தளத்தைச் சுற்றி 4 கி.மீ தொலைவுக்கு கட்டுமானங்கள் கட்ட வேண்டும் என்றால் விமானப்படை தளத்தில் தடையில்லா சான்று பெற வேண்டும் என்று சூலூர் விமானப்படை தள நிர்வாகம் சமீபத்தில் கூறியிருந்தது. இதற்கு சுற்று வட்டார கிராம மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் கிராமசபை கூட்டங்கள் நேற்று நடைபெற்றன. சூலூர் காடம்பாடி ஊராட்சியிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. அப்போது, விமானப் படை தளத்தைச் சுற்றி கட்டுமானங்கள் கட்ட தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என்ற விமானப்படை தள நிர்வாகத்தின் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து, காடம்பாடி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கூறுகையில், “எங்களுடைய கிராமத்தில் சுமார் 22 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். ஏற்கெனவே விமானப் படை தளம் எல்லையை ஒட்டியுள்ள 100 மீட்டர் தொலைவுக்கு கட்டுமானங்கள் கட்ட தடை உள்ளது. இந்நிலையில், 4 கி.மீ சுற்றுவட்டாரத்தில் கட்டுமானம் அமைக்க தடையில்லா சான்று பெற வேண்டும் என்று விமானப் படை தள நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். இந்த தடையில்லா சான்று பெறுவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இந்த சான்றிதழ் பெற பல நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதால் மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாக நேரிடும். எனவே, விமானப் படையின் இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் நான்கு கிராம மக்களை ஒன்றிணைத்து பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று தெரிவித்துள்ளனர்

கோவை சூலூர் விமானப் படைத் தளத்தில் தரங் சக்தி 2024 எனும் பன்னாட்டு விமானப் படை கூட்டு பயிற்சி 8 நாட்கள் நடைபெற்றது. இதில், இந்தியா, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த விமானப்படையினர் இணைந்து கோவையில் கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் கூட்டு விமான பயிற்சி மேற்கொண்டனர். இதன் நிறைவு விழா ஆகஸ்ட் 13 ம் தேதி நடந்தது. இதில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இந்திய விமானப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்திய விமானப் படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர்கள், தேஜஸ், சுக்காய், மிக் ஆகிய போர் விமானங்களில் வீரர்கள் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தி அசத்தினர். ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டைபூன் ரக போர் விமானம் மற்றும் ரஃபேல் ஆகிய விமானங்களும் பங்கேற்றன. கூட்டு விமானப் பயிற்சியில் பங்கேற்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த விமானப்படை தளபதிகளுக்கு ஆளுநர் ரவி நினைவுப் பரிசுகளை வழங்கி கெளரவித்தார்.