ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அடுத்த மாதம் பிரதமர் மோடி அமெரிக்காவுக்குச் செல்லும் நிலையில், ராகுல்காந்தியும் அதே மாதத்தில் அமெரிக்கா செல்கிறார். இருவரும் இந்திய-அமெரிக்க வம்சாவளியினருடன் கலந்துரையாடுகின்றனர்.
ஐ.நா. பொது சபையின் 79வது உயர்நிலைக் கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 24 முதல் 30ம் தேதி வரை நடக்கும் இந்தக் கூட்டத்தில் உரையாற்றவுள்ள சர்வதேச உத்தேச தலைவர்களின் பட்டியலை ஐ.நா. வெளியிட்டுள்ளது. அதன்படி, ஐ.நா. பொது சபை கூட்டத்தில் இந்திய அரசின் தலைவர் செப். 26ம் தேதி உரையாற்றவுள்ளார். அதன்படி பிரதமர் மோடி ஐ.நா. பொது சபை உயர்நிலைக் கூட்டத்தில் செப்டம்பர் 26ம் தேதி உரையாற்றவுள்ளார்.
முன்னதாக கடந்த 2014 செப்டம்பர் மாதத்தில் ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, நியூயாா்க்கில் உள்ள மேடிசன் ஸ்கொயர் கார்டன் என்ற கருத்தரங்கில் இந்தியா வம்சாவளியினர் மத்தியில் கலந்துரையாடினார். அதன்பிறகு 10 ஆண்டுகள் கழித்து இந்தாண்டு செப்டம்பர் 22ம் தேதி நியூயார்க்கின் லாங் தீவில் உள்ள கோலீஸியம் கருத்தரங்கில், இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். அதற்கான வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த 2019ம் ஆண்டு டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஹவுஸ்டன் நகரில் நடைபெற்ற ‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சியில் அப்போதைய அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி பங்கேற்றார். வருகிற நவம்பர் மாதத்தில் அமெரிக்காவில் அதிபர் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடியின் நியூயார்க் பயணம் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்ற பிறகு முதன் முறையாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார். அவர் அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள், மாணவர்கள், மக்கள் பிரதிநிதிகளை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் ராகுல் காந்தி அமெரிக்கா செல்லலாம் என்றும், அங்கு 8 முதல் 9 நாட்கள் வரை தங்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் உச்சக்கட்டத்தில் இருக்கும் நேரத்தில், ராகுல் காந்தியின் பயணம் முக்கியமாக பேசப்படுகிறுது. முன்னதாக ராகுல் காந்தி கடந்த ஆண்டு ஜூனில் அமெரிக்கா சென்றார். சான்பிரான்சிஸ்கோவில் இந்திய மாணவர்களுடனும், இந்திய வம்சாவளியினருடனும் உரையாடினார்.
அதற்கு முன்னதாக கடந்தாண்டு மார்ச் மாதம் இங்கிலாந்து சென்ற ராகுல்காந்தி, லண்டனில் கேம்பிரிட்ஜ் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி அடுத்தமாதம் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், அதற்கு முன்னதாக ராகுல்காந்தியும் அமெரிக்கா செல்வதால் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வரும் 23ம் தேதி அமெரிக்கா செல்கிறார். இதுகுறித்து பென்டகன் துணை செய்தித் தொடர்பாளர் சப்ரினா சிங், ‘இந்தியாவுடனான உறவுகள் மிகவும் மதிப்பு வாய்ந்தவை. இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவுடனான உறவுக்கு அமெரிக்கா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இந்தோ-பசிபிக் பிராந்தியம் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து முக்கிய தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்துவார்’ என்றார். பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு, ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் அமெரிக்கா செல்வது இதுவே முதல் முறையாகும்.