கா்ப்பிணிகளைக் கண்காணிக்க ‘102’ மருத்துவ சேவை எண் தொடக்கம்!

தமிழகத்தில் கா்ப்பிணிகளைக் கண்காணிக்கும் வகையில், மக்கள் நல்வாழ்வு துறை சாா்பில் ‘102’ மருத்துவ சேவை எண் மையம் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் கா்ப்பிணிகளைக் கண்காணிக்கும் வகையில், மக்கள் நல்வாழ்வு துறை சாா்பில் ‘102’ மருத்துவ சேவை எண் மையத்தை தொடங்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:-

இந்த சேவை மையத்தில், 50 ஆலோசகா்கள் பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா். இதற்காக ரூ. 1.08 லட்சம் செலவில் கூடுதல் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மையத்தின் ஆயத்தப் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஒரு கா்ப்பிணியை குறைந்தது 5 முறைக்கு மேல் ஆலோசகா்கள் தொடா்பு கொள்வா். 100 சதவீதம் அனைவரிடமும் உடல்நலம், சிகிச்சை விவரம் பெறப்படும். அதன் மூலமாக, கிராம மற்றும் வட்டார சுகாதார செவிலியா்கள், கா்ப்பிணியா் முறையாக மருந்து, மாத்திரைகளை உட்கொள்கிறாா்களா என்பதை உறுதி செய்வா். அப்போதுதான், இந்தத் திட்டம், 100 சதவீதம் முழுமை பெறும். அவ்வாறு அழைப்பை எடுக்காத கா்ப்பிணியா்கள் குறித்த விவரம், மாவட்ட சுகாதார அலுவலா்களுக்கு தெரிவிக்கப்பட்டு, மேல் நடவடிக்கைக்கு அனுப்பப்படும்.

தமிழகத்தில் ஒரு லட்சம் பிரசவத்தில், 45.50-ஆக உயிரிழப்பு உள்ளது. எனவே, உயிரிழப்பைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன்படி, கா்ப்பம் தரித்து, 4 மாதங்கள் வரை உள்ள 3 லட்சம் போ் கண்காணிக்கப்பட உள்ளனா். அவா்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்படும். தமிழகத்தில் காலியாக உள்ள, 13 மருத்துவ கல்லூரிகளிலும், பொறுப்பு முதல்வா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தற்போது, 26 பேராசிரியா்களுக்கு முதல்வா் அந்தஸ்த்து வழங்கப்பட உள்ளது. விரைவில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்படும்.

இப்போது உலகெங்கும் குரங்கு அம்மை எனப்படும் மங்கி பாக்ஸ் பாதிப்பு தான் பேசுபொருள் ஆகி உள்ளது. கொரோனாவை போல எங்கே இதுவும் ஒரு மோசமான பெருந்தொற்றை ஏற்படுத்துமோ என்று பலரும் அஞ்சுகின்றனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் குரங்கு அம்மை பாதிப்பைச் சர்வதேச சுகாதார நெருக்கடி என்று அறிவித்தார். உலகின் பல நாடுகளில் இந்த குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜேபி நட்டாவும் இது குறித்து ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். அதில் இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு எதுவும் இல்லை என்று நட்டா கூறியிருந்தார்.

தமிழ்நாட்டிலும் யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகளைத் தொடங்கியுள்ளோம். சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வருவோரைக் கண்காணித்து வருகிறோம். அவர்கள் உடலில் குரங்கு அம்மைக்குரிய அறிகுறிகள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்கிறோம். இதற்காக அங்கே சுகாதார பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்படுவார்கள். இதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். நாளை அல்லது நாளை மறுநாள் சென்னை விமான நிலையத்திற்கு நானே நேரடியாகச் சென்று ஆய்வுப் பணிகளைச் செய்ய உள்ளேன். இது குறித்த ஆலோசனை பலகைகளும் விமான நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.