விவசாயிகளுக்கு எதிராக காவல்துறையை ஏவி திமுக அரசு பழிவாங்குகிறதோ என சந்தேகம் எழுந்துள்ளதாக விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.
கோவை காரமடை, பொள்ளாச்சி ஆகிய இரு இடங்களில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்த காவல்துறை ஆய்வாளர்கள் அனுமதி மறுத்து விவசாயிகளை துன்புறுத்தியதைக் கண்டித்து கட்சி சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கம் எஸ்கேபி(என்பி) சார்பில், கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே ஆர்ப்பாட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்தது. சங்கத்தின் தமிழக இணை ஒருங்கிணைப்பாளர் ஏ.எஸ்.பாபு தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் முன்னிலை வகித்து பேசினார். போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் காவல்துறையினரின் நடவடிக்கையைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:-
தமிழகத்தில் பல இடங்களில் டிராக்டர் பேரணி அமைதியான முறையில் காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் கோவை மாவட்டத்தில் காரமடை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் காவல்துறை ஆய்வாளர்கள் ராஜசேகர், வெங்கடேஷ் ஆகியோர் டிராக்டரில் பேரணியாக வந்த விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியதுடன், வாகனங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பெண் விவசாயிகளை இரவு 7.30 மணி வரை தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளனர். பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
வாகன பேரணி நடத்த அனுமதி உள்ளது என ஆகஸ்ட் 14-ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் காரமடை, பொள்ளாச்சியில் நடந்த சம்பவங்கள் சட்ட விரோதமானது மட்டுமின்றி நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் இரு காவல் ஆய்வாளர்கள் செயல்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக தமிழக விவசாயிகள் மீது காவல்துறையை ஏவி திமுக அரசு பழிவாங்குகிறதோ என்ற அச்சம் தோன்றியுள்ளது. சந்தேகம் எழுந்துள்ளது.
தவறு செய்த காவல் ஆய்வாளர்கள் மற்றும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் ஆகஸ்ட் 27-ம் தேதி திருச்சியில் நடைபெறும் சங்க கூட்டத்தில் பங்கேற்க டெல்லியில் இருந்து விவசாயிகள் வருகின்றனர். கூட்டத்தில் கலந்துரையாடி நிறைவேற்றப்படும் தீர்மானத்தை பொறுத்து அடுத்த கட்ட போராட்டங்களை தீவிரப்படுத்துவோம் என எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.