சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

முடா நில முறைகேடு புகாரில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதியின் பெயரில் உள்ள 3 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் கையகப்படுத்தியுள்ளது. பதிலாக அவருக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் பல கோடி மதிப்பில் முறைகேடு நடந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் அளித்த புகாரில் தலைமைச் செயலாளர், அதிகாரிகளிடம் அறிக்கை பெற்றுள்ளார் ஆளுநர். சித்தராமையாவுக்கும் இதுகுறித்து நோட்டீஸ் அனுப்பியதுடன் தற்போது அவர் மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஆளுநரின் இந்த ஒப்புதலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து ஆளுநருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. அதேநேரத்தில் சித்தராமையா பதவி விலக வேண்டும் என பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆளுநரின் ஒப்புதலுக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா மனு அளித்தார். அந்த வழக்கின் விசாரணை இன்று பிற்பகல் நடைபெற்ற நிலையில் வருகிற ஆக. 29 ஆம் தேதி சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கும்வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது, சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கூடாது என விசாரணை நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு ஆக. 29 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.