புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டதற்கு சீமான் வரவேற்பு!

தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டதற்கு சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா, தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவராக நேற்று நியமனம் செய்யப்பட்டார். இதனையடுத்து, புதிய தலைமைச் செயலாளராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தனிச் செயலாளர் – 1 ஆக பணியாற்றி வந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி முருகானந்தம் நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் 50வது தலைமைச் செயலாளராக நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார். பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.

இதன்மூலம் தமிழ்நாட்டில் பட்டியலினப் பிரிவைச் சேர்ந்த 3வது தலைமைச் செயலாளர் என்ற பெருமையை முருகானந்தம் பெற்றுள்ளார். முன்னதாக 1985ஆம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் பத்மநாபன், 1999 கலைஞர் கருணாநிதி ஆட்சி காலத்தில் ஏ.பி.முத்துசாமி தலைமைச் செயலாளர்களாக இருந்துள்ளனர். நிதி உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பணியாற்றி பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்றவர் முருகானந்தம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டின் புதிய தலைமைச்செயலாளராக அனுபவமும், திறமையும் வாய்ந்த மதிப்பிற்குரிய முருகானந்தம் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்றும், முருகானந்தத்தின் உண்மையும், நேர்மையுமான, அர்ப்பணிப்பு மிகுந்த பணித்திறனுக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே இதனை கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதாரச் சிக்கல்களை உணர்வுப்பூர்வமாக அணுகி உரிய தீர்வினைக் காண, தமிழ்நாட்டின் அதியுயர் ஆட்சிமை பதவிகளில் மண்ணின் மொழியும், மக்களின் வலியும் புரிந்த மாட்சிமை பொருந்திய தமிழர்களே நியமிக்கப்பட வேண்டும் என்பது நாம் தமிழர் கட்சியின் நீண்டகாலக் கோரிக்கை என்ற சீமான், அதனை ஏற்கும் விதமான தற்போதைய நியமனம் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்று குறிப்பிட்டார்.

மேலும், “தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமனம் தமிழர்கள் இழந்த உரிமையை மீட்கவும், இருக்கும் உரிமையைப் பாதுகாக்கவும் கிடைத்த நல்வாய்ப்பாகும். இறையன்பு அவர்களுக்குப் பிறகு, தமிழர் ஒருவரைத் தலைமைச் செயலாளராக நியமித்துள்ள தமிழ்நாட்டு அரசிற்கு என்னுடைய உளப்பூர்வமான பாராட்டுகள்” என்றும் சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.