ரேஷன் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது: முத்துசாமி

ரேஷன் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்று அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பயனாளர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வீட்டு வசதி வாரிய துறை அமைச்சர் முத்துசாமி கலந்துகொண்டு பயனாளர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

கோவையில் 1,542 ரேஷன் கடைகள் இருக்கிறது. 11 லட்சத்து 42 ஆயிரம் குடும்ப அட்டைகள் மூலம் சுமார் 34 லட்சம் மக்கள் பயனடைகிறார்கள். 6,000 பேருக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முதல் கட்டமாக தற்போது 750 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு துறைகளிலும் நடைபெறும் பணிகள் குறித்தும் மக்கள் நலன் குறித்தும் முதல்-அமைச்சர் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். நியாயவிலை கடைகளில் பொருட்கள் வழங்கல் பணிகளில் தொய்வு காணப்பட்டது உண்மை. ஆனால் தற்போது 90 சதவீதம் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இவ்வாறு முத்துசாமி கூறினார்.