வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த யாருக்கும் குரங்கு அம்மை அறிகுறிகள் இல்லை என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார்.
குரங்கு அம்மை முதன்முதலில் 1958-ம் ஆண்டு கண்டறியப்பட்டது. இந்த தொற்று ஆப்பிரிக்கா நாடுகளில் உள்ள வனப்பகுதிகளில் உள்ள குரங்கிடம் இருந்து பரவியதாகக் கூறப்படுகிறது. தற்போது ஆப்பிரிக்கா மட்டுமின்றி 116 நாடுகளிலும் குரங்கு அம்மை பரவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. காய்ச்சல், தலைவலி, உடல்வலி மற்றும் தடிப்புகள் போன்றவை அந்த தொற்றுக்கான அறிகுறிகளாகும். ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நாட்டில் வேகமாக பரவி வரும் குரங்கு அம்மை தொற்றைக் கருத்தில் கொண்டு பொது சுகாதார அவசர நிலையை கடந்த 14-ம் தேதி உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. மத்திய அரசின் சுகாதார துறை அமைச்சகம் இது சம்பந்தமாக தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக சென்னை, மதுரை, திருச்சி, கோவை விமான நிலையங்களில் குரங்கு அம்மை அறிகுறிகளுடன் வருபவர்களை கண்காணித்து பரிசோதனை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் தலா 10 படுக்கைகளுடன் தனி வார்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது:-
வெளிநாடுகளிலிருந்து தமிழக விமான நிலையங்களுக்கு வருபவர்களை கண்காணிக்கும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி, சர்வதேச விமானங்களில் பயணித்து வருபவர்களின் உடல் வெப்பத்தை பரிசோதிக்கும் அமைப்பு ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இது கொரோனா காலங்களிலிருந்து பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த பரிசோதனைகளில் பயணிகளுக்கு காய்ச்சல் இல்லை எனில் பச்சை நிறத்திலும், காய்ச்சல் இருந்தால் சிகப்பு நிறத்திலும் விளக்கு எரிந்து எச்சரிக்கை ஒலி எழுப்பும்.
முழுநேரமும் பணியில் இருக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் நோயாளிகளை அடையாளம் கண்டு விமான நிலையத்திலேயே, அவர்களை தனிமைப்படுத்தும் அறையில் தங்க வைத்து முதலுதவிகளை செய்வார்கள். தேவைப்பட்டால் உயர் சிகிக்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்புவார்கள்.
அந்த வகையில் தமிழகத்தில் இதுவரை ஒருவருக்கு கூட குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்படவில்லை. அதேபோல் வெளிநாடுகளில் இருந்து வந்த எவருக்கும் அத்தகைய அறிகுறிகள் காணப்படவில்லை. ஆனாலும், கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.