நடைபெறவிருக்கும் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 44 வேட்பாளர்கள் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று (ஆக.26) வெளியிட்டது. இருப்பினும் அடுத்த சில நிமிடங்களிலேயே அதனை வாபஸ் பெற்றது. எதற்காக வாபஸ் பெறப்பட்டது எனத் தெரிவிக்கப்படாத நிலையில் திருத்தப்பட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பல ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வரும் செப்டம்பர் 18-ம் தேதி,செப். 25-ம் தேதி, அக். 1-ம் தேதி என மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று பாஜக 44 வேட்பாளர்கள் கொண்ட முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. இதில் 15 வேட்பாளர்கள் முதல் கட்டத் தேர்தலிலும், 10 வேட்பாளர்கள் 2வது கட்டத் தேர்தலிலும், 19 பேர் மூன்றாவது கட்டத் தேர்தலிலும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது. அந்தவகையில், ராஜ்போராவில் இருந்து அர்ஷித் பட், சோபியானில் ஜாவேத் அகமது, அனந்தநாக் மேற்கில் முகமது ரஃபீக் வானி, வழக்கறிஞர் சையது வசாஹத் அனந்தநாகில் இருந்தும், கிஷ்தாவரில் இருந்து சுஷ்ரி சாகுன் பரிஹாரும், டோடாவில் இருந்து கஞய் சிங் ரானாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இதனால் ஜம்மு காஷ்மீர் பாஜக தொண்டர்கள் உற்சாகமடைந்த நிலையில் சில நிமிடங்களிலேயே வேட்பாளர் பட்டியல் வாபஸ் பெறப்பட்டது. விவரம் அறிந்த கட்சி வட்டாரங்கள், முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பாளர்கள் பெயர்களை மட்டுமே அறிவிக்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தவறுதலாக 2 மற்றும் 3 ஆம் கட்ட தேர்தலுக்கான உத்தேச வேட்பாளர்கள் பெயர்கள் கொண்ட பட்டியலும் வெளியானதால் வாபஸ் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரில் மொத்தத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை 88.03 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் 43 லட்சத்து 13 ஆயிரம் பெண்கள், 168 மூன்றாம் பாலினத்தவர், 44 லட்சத்து 89 ஆயிரம் ஆண்கள் உள்ளிட்டோர் அடங்குவர். ஜம்மு காஷ்மீர் தேர்தலில் 93,284 புதிய வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்கு இணையாக இளம் மற்றும் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 18 வயதிலிருந்து 29 வயதுக்கு உட்பட்ட இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 34 ஆயிரமாகப் பதிவாகி உள்ளது. வாக்காளர் மக்கள்தொகை விகிதம் 0.59-லிருந்து 0.60 ஆக அதிகரித்துள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், ஜம்மு காஷ்மீர் தேர்தல் பணிகளுக்காக 298 கம்பெனி துணை ராணுவப்படைகள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.