பாஜகவில் சீனியர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும் என மூத்த அமைச்சர் துரைமுருகனை குறிப்பிட்டு பேசியுள்ளார் தமிழிசை சௌந்தரராஜன்.
அண்மையில் சென்னையில் நடைபெற்ற அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். முதல்வர் ஸ்டாலின், புத்தகத்தை வெளியிட முதல் பிரதியை பெற்றுக் கொண்டார் ரஜினிகாந்த். இந்த நிகழ்வில் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர். இந்த விழாவில் பேசிய ரஜினி, மூத்த அமைச்சர்களை வைத்து, தமிழக அரசை ஸ்டாலின் அரசு நடத்துவது பற்றி நடிகர் ரஜினிகாந்த் கிண்டலாக பேசினார். “ஒரு வகுப்பில் புதிய மாணவர்கள் வந்தால் சமாளித்து விடலாம். பழைய மாணவர்கள் இருந்தால் சமாளிப்பது கஷ்டம். பாஸ் ஆகி, ரேங்க் வாங்கிக்கொண்டும் போக மாட்டேன் என்று கூறிக்கொண்டு வகுப்பில் இருக்கிறார்கள் ஓல்டு ஸ்டூடன்ட்ஸ். அவர்களை சமாளிப்பது கடினம். குறிப்பாக துரைமுருகன் இருக்கிறார். அவர் கலைஞர் கருணாநிதி கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர். ஒரு விஷயம் செய்துகொண்டிருக்கிறோம் என்று அவரிடம் கூறி எப்படி இருக்கிறது என்று அவரிடம் கேட்டால் சந்தோஷம் என்று ஒரே வார்த்தையில் முடித்துவிடுவார். நன்றாக இருக்கிறது என்று சொல்கிறாரா அல்லது நன்றாக இல்லை என்று சொல்கிறாரா என்பது யாருக்கும் புரியாது. இந்த சூழலிலும் சிறப்பாக வேலை பார்த்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஹேட்ஸ் ஆஃப்’ எனப் பேசினார் ரஜினி.
ரஜினிகாந்த்தின் இந்தப் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட திமுக நிர்வாகிகள் பலரும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தனர். இந்நிலையில், ரஜினியின் பேச்சு தொடர்பான கேள்விக்கு நேற்று செய்தியாளர்களிடம் பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன் மூத்த நடிகர்கள் பல்லுப்போய், வயசாகி, தாடி வளர்த்துக்கொண்டும் நடிப்பதால் தான் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்று தெரிவித்தார். இந்நிலையில், இந்த சர்ச்சை பற்றி இன்று நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “துரைமுருகன் எனது நீண்ட கால நண்பர். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் என்ன சொன்னாலும் தப்பு கிடையாது. துரைமுருகன் உடனான எனது நட்பு எப்போதும் போல தொடரும்” என்று கூறினார். துரைமுருகனும், நடிகர் ரஜினி பற்றி நகைச்சுவையாக பேசினேன். எங்கள் நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாக பயன்படுத்த வேண்டாம். ரஜினியும், நானும் எப்போதும் நண்பர்களாவே இருப்போம் எனக் கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜனிடம் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் தெரிவித்த கருத்து பரபரப்பை எகிற வைத்திருக்கிறது. தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது:-
திமுக எனும் ஆலமரத்தை சாய்க்க முடியாது என ரஜினி தெரிவித்திருக்கிறார். தெலுங்கானாவில், ஆந்திராவில் இருந்த பெரும் ஆலமரங்கள் சாய்ந்திருக்கின்றன. அரசியலில் அசைக்க முடியாத ஆலமரம் என்பதெல்லாம் இல்லை. ரஜினி திமுக-வில் ஒரு புயலை உருவாக்கியிருக்கிறார். சுனாமியையே உருவாக்கி இருக்கிறார் என்று சொல்லலாம். பாவம் அண்ணன் துரைமுருகன். அமைச்சர் துரைமுருகன் வீட்டின் முன்னால் இருந்த மணலில் சிறுமியாக விளையாடியவள் நான். அவர் எனக்கு அவ்வளவு சீனியர். ஆனால், நானே ஒரு கட்சியின் தலைவராகி, இரண்டு மாநிலங்களின் ஆளுநராகி, தற்போது மீண்டும் கட்சியை பலப்படுத்தும் இடத்தில் இருக்கிறேன். அவ்வளவு சீனியரான துரைமுருகன் ஸ்டூடண்டாக இருக்க முடியாது, ஆசிரியராக இருந்திருக்க வேண்டும். ஆனால் கட்சிக்காக கடுமையாக உழைத்த துரைமுருகனை ஸ்டாலினுக்கு கீழ்ப்படிந்து இருக்கச் சொல்வார்கள், அடுத்து உதயநிதிக்கு கீழ்ப்படிய சொல்வார்கள். அதனால்தான் வாரிசு அரசியலை பாஜக எதிர்க்கிறது.
நாடாளுமன்றத் தலைவர் பதவி டி.ஆர். பாலுவிடமிருந்து பிடுங்கி கனிமொழியிடம் கொடுக்கப்பட்டது. துரைமுருகனுக்கு வரவேண்டியதை பறித்து ஸ்டாலினிடம் கொடுக்கப்பட்டது, அவருக்குப் பிறகான சீனியர்களுடையதை பிடுங்கி உதயநிதி ஸ்டாலினிடம் கொடுக்கப்படுகிறது. ஆக, ஒரு குடும்ப ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இது தவறு. எனவே, திமுக தொண்டர்கள் இதை சிந்திக்க வேண்டும். பாஜகவில் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது என்பதை இப்போது மீண்டும் நினைவுபடுத்துகிறேன். பாஜகவில் மூத்தவர்களுக்கு மரியாதை கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.